உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்கணும் சுற்றுலா பயணியருக்கு அட்வைஸ்

பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்கணும் சுற்றுலா பயணியருக்கு அட்வைஸ்

வால்பாறை : தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை, சுற்றுலாபயணியர் தவிர்க்க வேண்டும் என, வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.ஆனைமலை புலிகள் காப்பகத்தின் கட்டுப்பாட்டில், வால்பாறை மலைப்பகுதி அமைந்துள்ளது. இங்குள்ள மானாம்பள்ளி, வால்பாறை ஆகிய இரு வனச்சரகங்களில் அரிய வகை வனவிலங்குகளும், பசுமை மாறாக்காடுகளும் நிறைந்து காணப்படுகின்றன.இதனை பாதுகாக்கும் வகையில், மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.இந்நிலையில், இயற்கைக்கும், வனவிலங்குகளுக்கும்கேடுவிளைவிக்கும் பிளாஸ்டிக் பொருட்களை கடந்த, 2019ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் தமிழகத்தில் பயன்படுத்த அரசு தடை விதித்தது.ஆனால், சுற்றுலாபயணியர் அதிக அளவில் வந்து செல்லும், வால்பாறையில் சமீபகாலமாக பிளாஸ்டிக் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.வால்பாறை நகரில் உள்ள பெரும்பாலான கடைகளில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. நகராட்சி அதிகாரிகளும் உரிய நடவடிக்கை எடுக்காததால், அங்கு பிளாஸ்டிக் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது.ஆழியாறிலிருந்து மலைப்பாதை வழியாக வால்பாறைக்கு வரும் சுற்றுலாப்பயணியர், தாங்கள் கொண்டுவரும் பிளாஸ்டிக் பைகளை, உணவுப்பொருட்களோடு வனப்பகுதியில் வீசிவிட்டு செல்வதால், இதை உண்ணும் வனவிலங்குகள் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.இது குறித்து, வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது: ஆழியாறு, அட்டகட்டி, வால்பாறை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் சுற்றுலாபயணியர், சுற்றுச்சூழல் பாதிப்புக்கு காரணமான, பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்.மேலும் வால்பாறைக்கு சுற்றுலா செல்லும் பயணியர், கொண்டை ஊசி வளைவுகளுக்கு மத்தியில், வாகனங்களை நிறுத்தி உணவு உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.இயற்கைக்கும், வன விலங்குகளுக்கும் தீங்கு விளைவிக்கும் பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். இயற்கையை பாதுகாக்க, அவர்கள் வனத்துறைக்கு ஒத்துழைப்பு தர வேண்டும்.இவ்வாறு, தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ