வேளாண் செயல்முறை திட்டம்; கல்லூரி மாணவர்கள் விளக்கம்
கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு, அரசம்பாளையம் அமிர்தா வேளாண் கல்லூரி மாணவர்கள், வேளாண் செயல்முறை பயிற்சி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு விளக்கம் அளித்தனர்.கிணத்துக்கடவு, அரசம்பாளையம் அமிர்தா வேளாண்மை கல்லூரி மாணவர்கள், 10 குழுக்களாக பிரிந்து, ஒன்றியத்தில் ஊரக வேளாண் செயல்முறை பயிற்சி திட்டத்தில் செயல்பட்டு வருகின்றனர்.இதில், ஆண்டிபாளையம் ஊராட்சியில் உள்ள விவசாயிகளுக்கு, அசோலா வளர்ப்பு மற்றும் அதன் பயன்கள், ஹைட்ரோஜெல் பயன்பாடு மற்றும் போட்டோ கலவையின் பயன்கள் குறித்து மாணவர்கள் விளக்கினார்கள்.வடசித்தூர் ஊராட்சியில், உள்ள விவசாயிகளுக்கு மண்வளம் மற்றும் இதை பலப்படுத்துவதற்கான வழிமுறைகள், மண்புழுவின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும், இங்கு விவசாயிகளுடன் இணைந்து மரக்கன்று நடவு செய்தனர்.குளத்துப்பாளையம் ஊராட்சியில், தென்னையில் ஏற்படும் கேரள வாடல் நோய் பற்றிய விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மரத்தின் மகசூல் குறைக்கக்கூடிய வெள்ளை ஈக்கள் மற்றும் காண்டாமிருக வண்டுகள் கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து விளக்கினார்கள். மேலும், வாடல் நோய் வராமல் இருப்பதற்கான வழிமுறைகள், வண்டுகள் பூச்சிகள் கட்டுப்படுத்துவதன் வழிமுறைகள் குறித்து விளக்கினர்.