இயற்கை உர பயன்பாடு வேளாண்துறை அறிவுரை
பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் வேளாண் துறையினர் கூறியதாவது:இயற்கை உரம் என்பது மக்கிய சாண உரம், கம்போஸ்ட் உரம், ஆடு, மாடுகள், கோழிகளின் உரம், மற்ற மிருகங்களின் உரம், பசுந்தாழ் உரம், பசுந்தழை உரம், புண்ணாக்கு உரம், கருப்பு ஆலை கழிவு உரம், தென்னை நார் கழிவு உரம், மனித கழிவு உரம் உள்ளிட்டவை இயற்கை உரங்கள் என, அழைக்கப்படுகின்றன. இந்த இயற்கை உரங்கள், அனைத்து ஊட்டச்சத்துக்களையும் கொண்டுள்ளது. தழை, மணி, சாம்பல் சத்துக்களை தவிர்த்து, மற்ற சத்துக்களும் இதில் உள்ளன. எனவே, இவை நிலத்தில் இருப்பதால், பயிர்களின் ஊட்டச்சத்துக்களின் தேவையை ஓரளவு பூர்த்தி செய்கிறது.மண்ணில் உள்ள நுண்ணுயிர்கள், பாக்டீரியா, காளான் ஆகியவைகளின் உணவு தேவையை பூர்த்தி செய்து, அவைகள் பல்கி பெருக, உதவி செய்கிறது. இந்த நுண்ணுயிர்கள் அதிகமாக மண்ணில் இருந்தால்தான், மண்ணிலிருந்து ஊட்டச்சத்துக்களை பயிர்கள் எடுக்க உதவ முடியும். இயற்கை எரு, மக்கும் போது உண்டாகும் அமிலங்கள், நிலத்தில் உள்ள ஊட்டச்சத்துக்களை பயிர்களுக்கு கிடைக்க செய்கிறது.இவ்வாறு, பெரியநாயக்கன்பாளையம் வேளாண் துறையினர் கூறினர்.