விமான பயணிகள் ஒரு மணி நேரம் முன்னதாக வர வேண்டுகோள்
கோவை: கோவை விமான நிலையத்தில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதோடு, பயணிகள் ஒரு மணி நேரம் முன்னதாகவே பயணத்தை திட்டமிட, விமான நிலைய இயக்குனர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் போர் சூழ்நிலையால் விமான நேரங்களில் மாறுதல்கள் இருக்கலாம். விமான நேரம் முன், பின் மாறுதல்கள் இருக்கலாம்.பயணிகளிடையே பரிசோதனைகளும் கண்காணிப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது.எனவே, விமான பயணம் செல்வோர், ஒரு மணி நேரத்துக்கு முன்பாகவே விமான நிலையத்துக்கு வந்து பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என, விமான நிலைய இயக்குனர் சம்பத்குமார் தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், “இந்தியா - பாக்., போர் பிரச்னையால், நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில், பொதுமக்கள் கூடும் பகுதியில் பாதுகாப்புகள், பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இந்திய விமான நிலைய ஆணையத்தின் உத்தரவின்படி, பரிசோதனைகள் மேற்கொள்ள, அதிக நேரம் தேவை என்பதால், பயணிகள் தங்களது பயணத்துக்கு ஒரு மணி நேரம் முன்னதாகவே வந்து சேர வேண்டும். கடைசி நிமிட பயணத்தை தவிர்க்க வேண்டும். பாதுகாப்பு சோதனைகளுக்கு, ஒத்துழைப்பு தர வேண்டும்,” என கூறினார்.