உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நேரம் வரையறையின்றி மது விற்பனை; கட்டுப்பாட்டிற்கு கொண்டு வரணும்

நேரம் வரையறையின்றி மது விற்பனை; கட்டுப்பாட்டிற்கு கொண்டு வரணும்

பொள்ளாச்சி: பொள்ளாச்சியில், பல 'டாஸ்மாக்' மதுபான கடைகள், நேரம் வரையறையின்றி செயல்படுவது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்துகிறது. டாஸ்மாக் கடையில், மதியம், 12:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை மட்டுமே மதுபானங்கள் விற்பனை செய்ய வேண்டும் என்பது அரசு விதி. அதன்படி, பொள்ளாச்சி, ஆனைமலை உள்ளிட்ட பகுதிகளில், 22 டாஸ்மாக் மதுபான கடைகள் செயல்படுகின்றன. பெரும்பாலான கடைகளில், 'பார்' வசதியும் உள்ளது. ஆனால், பல கடைகளை ஒட்டி செயல்படும் பார்களில், 24 மணி நேரமும், மது விற்பனை தாராளமாக நடக்கிறது.அதிகாலை, நள்ளிரவு என, எந்த நேரத்திலும் உடனடியாக மது பாட்டில்கள் கிடைக்கிறது. அதிலும், பல்வேறு மாவட்டங்களில் இருந்து வால்பாறை செல்லும் சுற்றுலா பயணியர், கோட்டூர் ரோடு, சமத்துார் உள்ளிட்ட டாஸ்மாக் கடைகளுக்குச் சென்றால், மதுபாட்டில்கள் கிடைக்கும் என்பதை அறிந்து, காலையிலேயே வாங்கி செல்வது வேடிக்கையாக உள்ளது. சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: மதியம், 12:00 மணிக்கு டாஸ்மாக் கடை திறக்கும் வரை, பொறுமை இல்லாத 'குடி'மகன்கள், காலையிலேயே மது குடிக்க முற்படுகின்றனர். இதனை சாதமாக்கிக் கொண்டு, பல டாஸ்மாக் பார்களில், நேர வரைமுறையின்றி மதுபாட்டில்கள் விற்கப்படுகிறது. பணத்தை பற்றி கவலை கொள்ளாததால், பீர் மற்றும் குவாட்டர் பாட்டிலுக்கு 70 முதல் 100 ரூபாய் கூடுதலாக விற்கின்றனர். இ தேபோல, காலை நேரத்தில் வால்பாறை செல்லும் சுற்றுலாப் பயணிகள் பலர், மதுபாட்டில்கள் வாங்கிச் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். மக்கள் நலனை கருத்தில் கொண்டு, 24 மணி நேரமும் செயல்படும் 'டாஸ்மாக் பார்' மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கலால் பிரிவு அதிகாரிகளின் தீவிர கண்காணிப்பு அவசியம். இவ்வாறு, அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி