மொத்த பழக்கடைகளுக்கு மாற்று இடம்; வியாபாரிகளிடம் கமிஷனர் ஆலோசனை
கோவை; கோவை கருப்ப கவுண்டர் வீதியில் செயல்படும் மொத்த பழ வியாபாரிகளுக்கு, மாற்று இடம் ஒதுக்கிக் கொடுப்பது தொடர்பாக, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் ஆய்வு செய்தார்,கோவை - மேட்டுப்பாளையம் ரோட்டில், அண்ணா காய்கறி மார்க்கெட் செயல்படுகிறது. மாநகராட்சி சார்பில் மேம்பாட்டு பணிகள் நடந்து வருகின்றன. கடைகள் கட்டப்பட்டு உள்ளன. அவற்றை ஏலமிட்டு, கடைகளை ஒதுக்கிய பின், ரோடு போடுவது உள்ளிட்ட மற்ற பணிகளை செய்வது தொடர்பாக, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் நேற்று முன்தினம் ஆய்வு செய்தார்.அதன்பின், எம்.ஜி.ஆர்., மார்க்கெட்டுக்கு சென்ற கமிஷனரிடம், 'மழைக்காலத்தில் தண்ணீர் தேங்குவதால் சேறும், சகதியுமாகி விடுகிறது; திறந்தவெளியில் காய்கறிகள் இருப்பதால் மழை நீரில் வீணாகின்றன. மார்க்கெட்டில் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும்' என, வியாபாரிகள் கோரிக்கை விடுத்தனர்.அதைத்தொடர்ந்து, என்னென்ன பணிகள் மேற்கொள்ள வேண்டும்; மார்க்கெட் வளாகத்தின் பரப்பு உள்ளிட்டவற்றை கமிஷனர் கேட்டறிந்தார். இதேபோல், கருப்ப கவுண்டர் வீதியில் உள்ள மொத்த பழ வியாபாரிகள், மார்க்கெட் போல் ஓரிடம் ஒதுக்கிக் கொடுக்க கோரிக்கை விடுத்திருந்தனர். இப்பகுதியில் செயல்படும் பழக்கடைகளால், வீதியில் அடிக்கடி போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. இதற்கு தீர்வு ஏற்படுத்தும் வகையில், மொத்த பழ வியாபாரத்துக்கு மார்க்கெட் அமைத்துக் கொடுக்கலாம் என மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.இதற்காக பழ வியாபாரிகளிடம் ஆலோசித்த கமிஷனர், 'ஒவ்வொரு கடைக்கும் எத்தனை சதுரடி இடம் தேவைப்படும்; நாளொன்றுக்கு எவ்வளவு லாரிகளில் பழங்கள் கொண்டு வரப்படும்; வாகன போக்குவரத்து எப்படியிருக்கும். கடைகள் எவ்வளவு நேரம் செயல்படும்' என, வியாபாரிகளிடம் கேட்டறிந்தார்.