உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அக்ரஹார சாமக்குளம் ஏரிக்கு அமெரிக்க பயணிகள் வருகை

அக்ரஹார சாமக்குளம் ஏரிக்கு அமெரிக்க பயணிகள் வருகை

கோவில்பாளையம்; அக்ரஹார சாமக்குளம் ஏரிக்கு அமெரிக்க சுற்றுலாப் பயணிகள் வருகை தந்தனர். கோவில்பாளையம் அருகே அக்ரஹார சாமக் குளத்தில் 160 ஏக்கர் பரப்பளவு உள்ள ஏரி உள்ளது. இங்கு கவுசிகா நீர்க்கரங்கள் அமைப்பின் சார்பில், நான்கு ஆண்டுகளாக குளம் சீரமைப்பு பணி நடந்து வருகிறது. மழை நீர் வரும் பாதை சீரமைக்கப்பட்டுள்ளது. அத்திக்கடவு அவிநாசி திட்டத்தில் இக்குளம் சேர்க்கப்பட்டுள்ளது. பறவைகள் தங்கும் மண் திட்டு அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கோவையில் உள்ள சிற்றுளி அமைப்பின் சார்பில் அமெரிக்க வாழ் மாற்றுத்திறனாளிகள் முப்பது பேர் சுற்றுலாவாக நேற்று முன் தினம் அக்ரஹார சாமக் குளம் ஏரியை பார்வையிட வந்தனர். அவர்களுக்கு ஏரிக்கரையில் உள்ள லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. கோவில் வளாகத்தில் பொங்கல் வைக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். அதன் பிறகு குளக்கரையில் சுற்றுலாப் பயணிகள் தங்கள் கைகளாலேயே குழி தோண்டி மரக்கன்றுகளை நட்டனர். ஏற்கனவே உள்ள மரக்கன்றுகளுக்கு நீர் விட்டனர். மரக்கன்றுகள் கால்நடைகளால் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக மரக்கன்றுகளுக்கு துணிகளை சுற்றி போர்வை அமைத்தனர். குளத்தில் செய்யப்பட்டிருக்கும் பணிகளை பார்த்து பாராட்டினர். இந்நிகழ்ச்சியில் சுற்றுலா அமைப்பினரும், கவுசிகா நீர்க் கரங்கள் அமைப்பினரும் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !