அம்மா உணவகத்தில் வசதியில்லை: கண்டுகொள்ளாத நகராட்சி நிர்வாகம்
வால்பாறை:வால்பாறையில் உள்ள, அம்மா உணவகத்தில் போதிய அடிப்படை வசதி இல்லாததால், உணவு அருந்த செல்லும் மக்கள் அவதிக்குள்ளாகின்றனர். வால்பாறை புதுமார்க்கெட் பகுதியில் 'அம்மா உணவகம்' செயல்படுகிறது. இங்கு, காலையில் இட்லி ஒரு ரூபாய்க்கும், மதியம் சாம்பார் சாதம் 5 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. குறைந்த விலையில் உணவு வழங்கப்படுவதால், நாள் தோறும் நுாற்றுக்கணக்கான மக்கள் உணவருந்துகின்றனர். குறிப்பாக, அரசு ஊழியர்கள், பள்ளி, கல்லுாரி மாணவர்கள், எஸ்டேட் தொழிலாளர்கள் அதிக அளவில் அம்மா உணவகத்தை பயன்படுத்துகின்றனர். இந்நிலையில், மழை காலத்தில் மேற்கூரை சில இடங்களில் ஒழுகுவதால் தரைதளம் முழுவதும் மழைநீர் தேங்கி விடுகிறது. உணவு அருந்த வரும் மக்கள், டைல்ஸ் தரையில் நீர் தேங்கி நிற்பது தெரியாமல் வழுக்கி விழுந்து காயமடைகின்றனர். உணவகத்தின் பின்புறம் உள்ள குழாய் உடைந்து சேதமான நிலையில், கழிவுகள் மார்க்கெட் வீதி வழியாக செல்கிறது. இதனால், துர்நாற்றம் வீசுகிறது. மார்க்கெட் வியபாரிகள் அவதிக்குள்ளாகின்றனர். பொதுமக்கள் கூறியதாவது: வால்பாறை நகராட்சியில் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதி செய்வதில் சுணக்கம் காட்டி வருகின்றனர். ஏழை, எளிய மக்கள் அதிக அளவில் பயன்படுத்தும் அம்மா உணவகத்தில் மின்விளக்கு, மின்விசிறி இயங்குவதில்லை. உணவகத்தின் தரையில் டைல்ஸ் உடைந்த நிலையில் காணப்படுகிறது. கை கழுவும் இடத்தில் குழாய் சேதமடைந்து தண்ணீர் வருவதில்லை. ஏழை, எளிய மக்கள் அதிகளவில் பயன்படுத்தும் அம்மா உணவகத்துக்கு தேவையான அடிப்படை வசதிகளை நகராட்சி செய்து தர வேண்டும். இவ்வாறு, கூறினர்.