உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மோசமான ரோடுகளால் விபத்து அதிகரிப்பு

மோசமான ரோடுகளால் விபத்து அதிகரிப்பு

சூலுார்; நான்கு புறமும் செல்லும் ரோடுகள் மோசமாக மாறியுள்ளதால், போகம் பட்டி, திம்மநாயக்கன்பாளையம் கிராம மக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.சுல்தான்பேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட போகம் பட்டி, திம்மநாயக்கன் பாளையம் கிராமங்களில், 2 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். விவசாயம் பிரதானமாக உள்ளது. இந்த கிராமங்களை சுற்றியுள்ள ரோடுகள், மேடு, பள்ளங்களாக மாறி உள்ளதால், மக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர். போகம்பட்டியில் இருந்து திம்மநாயக்கன்பாளையம் செல்லும் ரோடு, பல ஆண்டுகளுக்கு முன் போடப்பட்டது.இதேபோல், இடையர்பாளையத்தில் இருந்து செலக்கரச்சல் செல்லும் ரோடு, சித்தநாயக்கன்பாளையம் ரோடும் பல ஆண்டுகளுக்கு முன் போடப்பட்டது. கனரக வாகன போக்குவரத்து அதிகரித்த காரணத்தால், இந்த ரோடுகள் சேதமடைந்துள்ளன. இதனால், இந்த ரோடுகளில் செல்லும் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில்,' பிரதான ரோடுகளுடன் இணையும் கிராம சாலைகள் அனைத்தும் சேதமடைந்து விட்டது.இரு சக்கர வாகனங்களை ஓட்டக்கூட முடியாத அளவில் கற்கள் பெயர்ந்து, மேடு, பள்ளங்களாக மாறி உள்ளன. இரு புறங்களிலும் புதர் மண்டி கிடக்கிறது. உடனடியாக ரோடுகளை பழுதுபார்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !