உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அன்புக் கரங்கள் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க வந்தது அழைப்பு

அன்புக் கரங்கள் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க வந்தது அழைப்பு

கோவை; பெற்றோர் இருவரையும் அல்லது ஒருவரை இழந்து, வறுமையில் வாடும் குழந்தைகள், 18 வயது வரை கல்வி கற்கும் வகையில், மாதந்தோறும் 2,000 ரூபாய் உதவித்தொகை வழங்கும், 'அன்புக் கரங்கள்' திட்டம், சமீபத்தில் கோவையில் துவக்கப்பட்டது; முதல் கட்டமாக 140 பேர் பயனாளிகளாக தேர்வு செய்யப்பட்டனர். இதற்காக, வறுமையில் உள்ள குழந்தைகளை அடையாளம் காண, தமிழ்நாடு மின் ஆளுமை முகமை வாயிலாக, வறுமைக்கோட்டுக்கு கீழுள்ள குடும்பத்தினனர் விபரங்களை, கோவை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு துறை பெற்றது. குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவை துறை புதிய செயலி உருவாக்கி, இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் மற்றும் சுய உதவிக் குழு உறுப்பினர்களால், பெற்றோரை இழந்த குழந்தைகளின் விவரங்கள் சரிபார்க்கப்பட்டன. இதன் அடிப்படையில், பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அடையாள அட்டை வழங்கப்பட்டது. மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ஹப்சா கூறியதாவது: கோவை மாவட்டத்தில், 5,000 குடும்பத்தினர் வறுமைக்கோட்டுக்கு கீழ் இருப்பதாக, தமிழ்நாடு மின் ஆளுமை முகமை மூலமாக பட்டியல் தரப்பட்டது. பயனாளிகளை தேர்வு செய்ய, 5 வகையான வழிகாட்டுதல்களை தமிழக அரசு வழங்கியுள்ளது. 11 தாலுகாக்களுக்கும் சென்று, கள ஆய்வு செய்து, நிபந்தனைகளுக்கு உட்பட்டு, முதல்கட்டமாக, 140 குழந்தைகள் தேர்வு செய்யப்பட்டனர். இனி, அடுத்தடுத்த கட்டங்களில் பயனாளிகள் தேர்வு செய்யப்படுவர். அரசாணையில் குறிப்பிட்டுள்ள, 5 வகைப்பாடுகளுக்குள் வராத குழந்தைகளை தேர்வு செய்யவில்லை. இவ்வகைப்பாட்டில் சேராத குழந்தைகள் இருப்பின், அவர்களுக்கு வேறு திட்டங்களில் உதவி செய்ய முடியும். யாருமே கவனிக்க முடியாதவர்களாக இருப்பின், அவர்களுக்காக காப்பகம் நடத்துகிறோம். அவர்களை 18 வயது வரை பாதுகாத்து, கல்வி கற்றுக் கொடுக்கிறோம். யாருமே இல்லாத பட்சத்தில், 21 வயது வரை அடைக்கலம் கொடுத்து உயர்கல்வி கற்பிக்கிறோம். மாவட்டம் முழுவதும் 38 காப்பகங்கள் உள்ளன. உதவி தேவைப்படுவோர், உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் விண்ணப்பிக்கலாம். பரிசீலனை செய்து, உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி