உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஹேக் செய்யப்படும் ஆண்ட்ராய்டு போன்கள்; பாதிக்கப்பட்ட வாலிபர் போலீசில் புகார்

ஹேக் செய்யப்படும் ஆண்ட்ராய்டு போன்கள்; பாதிக்கப்பட்ட வாலிபர் போலீசில் புகார்

கிணத்துக்கடவு; மொபைல்செயலி வாயிலாக போன் 'ஹேக்' செய்யப்படுவதால், ஆண்ட்ராய்டு போன் பயனாளர்கள் அச்சமடைந்துள்ளனர்.ஆண்ட்ராய்டு போன் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், மொபைல்போன் பயன்படுத்துவோர், தனிப்பட்ட தரவுகள், முக்கிய ஆவணங்கள், வங்கிக் கணக்குகள், சமூக வலைதள கணக்கு என பல்வேறு அம்சங்களை பயன்படுத்தி வருகின்றனர்.இந்த ஆண்ட்ராய்டு போனை, தற்போது மொபைல் செயலி வாயிலாக 'ஹேக்' செய்து வருகின்றனர். கிணத்துக்கடவு பகுதியில் தற்போது இந்த பிரச்னை தலைதுாக்கி உள்ளதால், மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.வங்கி செயலி போல், போலியாக ஒன்றை உருவாக்கி, அதை தனிப்பட்ட ஒருவர் மொபைல் நம்பரில் இருந்து, வாட்ஸ்ஆப் குழுக்கள் வாயிலாக பகிர்ந்து, குழுவில் உள்ள மற்றவர்கள் தனிப்பட்ட விவரங்களை திருட முற்படுகின்றனர்.இதனால், முக்கிய வாட்ஸ்ஆப் குரூப்களில் இருந்து பலர் வெளியேறி வருகின்றனர். இது மட்டும் இன்றி, தேசிய மயமாக்கப்பட்ட பிற வங்கி முத்திரை கொண்ட செயலி, கல்யாணம் மற்றும் பிற சுப நிகழ்ச்சிகான பத்திரிகைகள் என போலியாக லிங்க் அனுப்பி மற்றவர்களின் தரவுகளை ஹேக்கர்கள் திருடுகின்றனர்.இதை தடுக்க வேண்டுமென பொதுமக்கள் பலர் வலியுறுத்தி வருகின்றனர். இது போன்ற செயலில் ஈடுபடுபவர்கள் மீது போலீசார் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவிக்கின்றனர்.போன் ஹாக்கிங்கில் பாதிக்கப்பட்ட சரவணன் கூறியதாவது:நேற்று காலை எனது சொந்த வேலைக்காக பேங்க் சென்று வந்தேன். அதன்பின், ஒரு மணி நேரமாக போன் பயன்படுத்தவில்லை. ஆனால் எனது மொபைல் நம்பரில் இருந்து எனது வாட்ஸ்ஆப் குரூப் அனைத்துக்கும் போலியாக பேங்க் பேரில் செயலி ஒன்று அனுப்பப்பட்டிருந்தது.இதை கவனித்த எனது நண்பர்கள், போன் ஹேக் செய்யப்பட்டுள்ளதை தெரிவித்தனர். உடனடியாக கிணத்துக்கடவு போலீஸ் ஸ்டேஷன் மற்றும் கோவை சைபர் கிரைம் பிரிவில் புகார் அளித்துள்ளேன்.இவ்வாறு, கூறினார்.

'லிங்க்'கை தொடாதீங்க!

போலீசார் கூறியதாவது: 'இதுபோன்ற சைபர் குற்றங்கள் அதிகளவில் நடக்கின்றன. அதற்காகத்தான், மொபைல்போனில் வரும் 'லிங்க்' போன்றவற்றில் எவ்வித பதிவு செய்ய வேண்டாம் என, விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.நவீன வளர்ச்சி, டிஜிட்டல் மயமாக்கலை தொடர்ந்து, சைபர் கிரைம் அதிகரித்து வருகிறது. மொபைல்போன் உபயோகிப்போர் மிக கவனமாக இருக்க வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ