மேலும் செய்திகள்
லஞ்ச ஒழிப்பு துறையின் அலட்சியம்!
12-Jul-2025 | 1
கோவை:கோவை மாநகராட்சியில் இளநிலை பொறியாளராக பதவி வகித்த விமல்ராஜ், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.கோவை மாநகராட்சி, 80, 81, 83வது வார்டு இளநிலை பொறியாளராக இருந்தவர் விமல்ராஜ்; ஒப்பந்ததாரர்களிடம் லஞ்சம் வாங்குவதாக, லஞ்ச ஒழிப்பு துறைக்கு புகார் சென்றது. வ.உ.சி., பூங்கா வளாகத்தில் உள்ள வார்டு அலுவலகத்தில் ஆய்வு செய்தபோது, ஒரு லட்சத்து, இரண்டாயிரத்து, 100 ரூபாய் கைப்பற்றப்பட்டது. இவர் மீது மாநகராட்சி நிர்வாகம் துறை ரீதியாக எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக, கடலுார் மாநகராட்சிக்கு மாற்றம் செய்யப்பட்டு, கோவையில் இருந்து விடுவிக்கப்பட்டார். அங்கு, அவர் தற்போது தொழில்நுட்ப உதவியாளராக பணிபுரிகிறார். இது, சந்தேகத்தை வலுப்படுத்தியது. இதையடுத்து, விசாரணையை லஞ்ச ஒழிப்பு துறையினர் தீவிரப்படுத்தினர்.கோவையில் இளநிலை உதவியாளராக விமல்ராஜ் பணியாற்றிய காலகட்டத்தில், வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்கள், வீடுகள், வீட்டுமனைகள், கட்டடங்கள், வாகனங்கள் வாங்கியிருப்பதும், வங்கி கணக்குகளில் பணம் வைத்திருப்பதும், அவரது தாய் கமலா, சகோதரி திவ்யா ஆகியோரது பெயரில் சட்ட விரோதமாக சொத்து குவித்திருப்பதாகவும் தகவல் கிடைத்தது.கடந்த, 2020 ஏப்., 1 முதல், 2024 ஜூலை 31 வரையிலான காலகட்டத்தில், அவர் ஈட்டிய வருமானத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் ஆய்வுக்கு உட்படுத்தினர். 2020 ஏப்., 1 அன்று, விமல்ராஜ், அவரது தாயார், சகோதரி ஆகியோரது பெயர்களில், 23 லட்சத்து, 75 ஆயிரத்து 846க்கு- சொத்து இருந்தது. 2024 ஜூலை 31 அன்று, இம்மூவரின் பெயர்களில், ஒரு கோடியே எட்டு லட்சத்து, 96 ஆயிரத்து, 712 ரூபாய்க்கு சொத்து இருப்பது கண்டறியப்பட்டது.இவர், 85 லட்சத்து, 20 ஆயிரத்து, 866 ரூபாய் மதிப்புக்கு சொத்துகள் மற்றும் நிதியாதாரங்களை திரட்டியிருப்பது தெரியவந்தது. பரிசோதனை காலகட்டத்தில், சட்டப்பூர்வமாக, 37 லட்சத்து, 72 ஆயிரத்து, 841 ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளார். இதில், குடும்பச் செலவுக்காக, 21 லட்சத்து, 31 ஆயிரத்து, 541 ரூபாய் செலவிட்டிருக்கிறார். மூவரின் பெயரில், 16 லட்சத்து, 41 ஆயிரத்து 300 ரூபாய் சேமிப்பு இருக்கிறது. இறுதியாக, 68 லட்சத்து, 79 ரூபாய், 566 ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை அதிகமாக சேர்த்திருப்பது கண்டறியப்பட்டது.குடும்பச் செலவு, தங்கம் மற்றும் வெள்ளி வாங்குதல், சொத்து வரி பெயர் மாற்ற கட்டணம், குடிநீர் கட்டணம், ஆண்டு மற்றும் அரை ஆண்டு அடிப்படையில் செலுத்திய இன்சூரன்ஸ், பத்திர பதிவு மற்றும் ஸ்டாம்ப் கட்டணங்களுக்கு விமல்ராஜூம், அவரது தாய் மற்றும் சகோதரி பெயரிலும் பத்திர பதிவு செய்ய கட்டணங்கள் செலுத்த செலவிட்டுள்ளார்.மாநகராட்சியில் கீழ்மட்ட பணியாளராக இருந்தபோதிலும், 68 லட்சத்து, 79 ஆயிரத்து, 566 ரூபாய்க்கு சொத்து சேர்த்திருப்பது-, வருவாயை விட, 182 சதவீதம் அதிகம். இது, ஊழல் தடுப்பு சட்டத்த்தின் கீழ் குற்றம். அதனால், விமல்ராஜ் மீதும், அவரது தாய் கமலா, சகோதரி திவ்யா ஆகியோர், சட்ட விரோதமாக சொத்து சேர்க்க துாண்டுதலாக இருந்ததற்காக, அவர்கள் மீதும், வருமானத்தை மீறி சொத்து சேர்த்ததாக, கோவை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் எழிலரசி வழக்குப்பதிந்துள்ளார். இதன் மீது நடவடிக்கை எடுக்க, மாவட்ட முதன்மை நீதிபதிக்கு எப்.ஐ.ஆர்., நகல் அனுப்பப்பட்டு உள்ளது.
12-Jul-2025 | 1