பஸ் ஸ்டாப்பில் நிறுத்தாததால் பஸ் டிரைவரிடம் வாக்குவாதம்
பொள்ளாச்சி : பொள்ளாச்சி அருகே, பஸ் ஸ்டாப்பில் நிற்காத அரசு பஸ் ஊழியர்களிடம் மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.பொள்ளாச்சியில் இருந்து, அங்கலகுறிச்சி வழியாக ஆழியாறுக்கு, '10 பி' அரசு பஸ் இயக்கப்படுகிறது. தபால் நிலைய பஸ் ஸ்டாப்பில் கர்ப்பிணி மற்றும் பயணியர் காத்திருந்த போதும், பஸ் நிற்காமல் சென்றது. பஸ்சை நிறுத்துவதற்காக கர்ப்பிணி சைகை காட்டியும் நிற்காமல் சென்றதாக கூறப்படுகிறது.இந்நிலையில், இந்த பஸ், ஆழியாறு சென்று மீண்டும், அங்கலகுறிச்சி தபால் நிலைய பஸ் ஸ்டாப் அருகே வந்த போது, பஸ்சை மறித்து மக்கள், ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.அப்போது, ஓட்டுநர், 'இவ்வழித்தடத்தில் புதியதாக இயக்குவதாகவும், பஸ் நிறுத்தம் இருப்பது தெரியாது,' என பதில் கூறினார். இனி நிறுத்தாமல் செல்லக்கூடாது என மக்கள் எச்சரித்தனர். இச்சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.பொதுமக்கள் கூறுகையில், 'அரசு பஸ்கள் பெரும்பாலும் உரிய நேரத்துக்கு இயக்குவதில்லை. பஸ் ஸ்டாப்களில் சரிவர நிற்பதில்லை. மக்களின் போக்குவரத்து சேவைக்காக அரசு பஸ் இயக்கப்படுகிறது. ஆனால், ஊழியர்கள் சிலரின் அலட்சியத்தால் மக்கள் பாதிக்கின்றனர். இதற்கு அதிகாரிகள் தீர்வு காண வேண்டும்,' என்றனர்.