| ADDED : நவ 14, 2024 11:42 PM
கோவை: கோவை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அர்ஜூன் சம்பத்தின் மகன் சிறையில் அடைக்கப்பட்டார். கோவை, ஈஷா யோகா மையம் குறித்து, நக்கீரன் இதழில் அவதுாறு பரப்பி வருவதாக கூறி, அதன் ஆசிரியர் கோபாலை கண்டித்து ஹிந்து மக்கள் கட்சி சார்பில் கடந்த, 27 ல், கோவையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத்தின் மகன், இளைஞரணி தலைவரான ஓம்கார் பாலாஜி, ''நக்கீரன் ஆசிரியர் கோபால் நாக்கை அறுப்பேன்'' என்று பேசிய வீடியோ பரவியது. புகாரின் பேரில், பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல், கொலை மிரட்டல் ஆகிய பிரிவின் கீழ் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர்.முன்ஜாமின் கேட்டு, சென்னை ஐகோர்ட்டில் ஓம்கார் பாலாஜி மனு தாக்கல் செய்தார். மனு விசாரணைக்கு வந்த போது, ஓம்கார் பாலாஜியை போலீசார் கைது செய்ய விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீட்டிக்க வேண்டும் என்று அவரது வக்கீல் வாதிட்டார். இதற்கு மறுத்த நீதிபதி, முன்ஜாமின் விசாரணையை வரும், 19 க்கு ஒத்திவைத்தார்.பின்னர், ஐகோர்ட் வளாகத்திலிருந்து வெளியே வந்த போது அங்கு தயாராக இருந்த போலீசார் ஓம்கார் பாலாஜியை அதிரடியாக கைது செய்தனர். அவரை கோவைக்கு அழைத்து வந்து ஜே.எம்:3, கோர்ட்டில் நேற்று ஆஜர்படுத்தினர். அவரை, வரும் 28 வரை, நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட் அருண்குமார் (பொறுப்பு) உத்தரவிட்டதை தொடர்ந்து, கோவை சிறையில் அடைக்கப்பட்டார்.