கலைத்திருவிழா போட்டிகள்
கோவை:கோவையில் அரசு ஆரம்பப்பள்ளி மாணவர்களுக்கான வட்டார அளவிலான கலைத்திருவிழா போட்டிகள், நேற்று நடைபெற்றன. 1 முதல் 5ம் வகுப்பு வரை மாணவர்களுக்கான குறுவள மைய அளவிலான போட்டிகளில் முதலிடம் பெற்றவர்கள், வட்டார அளவிலான கலைத்திருவிழா போட்டிக்குத் தகுதி பெற்று பங்கேற்றனர். பேரூர், கோவை நகரம், சூலூர் உள்ளிட்ட 15 ஒன்றியங்களில் மையங்கள் அமைக்கப்பட்டு, 300க்கும் மேற்பட்ட அரசு ஆரம்பப்பள்ளி மாணவர்கள் தங்கள் கலைத்திறன்களை வெளிப்படுத்தினர். வில்லுப்பாட்டு, கரகம், நாட்டுப்புற நடனம், பாடல், ஓவியம் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன. ஆசிரியர்கள் மற்றும் பகுதிநேர ஆசிரியர்கள் நடுவர்களாக பணியாற்றினர். வட்டார அளவிலான கலைத்திருவிழா போட்டிகள் 6 முதல் 8ம் வகுப்பு (அக்.14), 9 முதல் 10ம் வகுப்பு (அக்.15) மற்றும் 11 முதல் 12ம் வகுப்பு (அக்.16) மாணவர்களுக்கு ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளன. இந்த போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்கள், மாவட்ட அளவிலான கலைத்திருவிழா போட்டிக்குத் தகுதி பெறுவர்.