கலைத்திருவிழா போட்டிகள் நிறைவு
மேட்டுப்பாளையம்: தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு ஆண்டுதோறும் கலைத்திருவிழா போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த போட்டிகளில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன. கோவை மாவட்டம் காரமடை கல்வி வட்டாரத்தில் உள்ள காரமடை, மேட்டுப்பாளையம், சிறுமுகையில் உள்ள 144 அரசு மற்றும் அரசு உதவி பெறும் துவக்கப்பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகள், மேல்நிலைப்பள்ளிகளில் 1 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கு கலைத்திருவிழா போட்டிகள் கடந்த அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் துவங்கி நடைபெற்று வந்தது. இப்போட்டிகள் அனைத்தும் அண்மையில் நிறைவு பெற்றன. இந்த ஆண்டு 'பசுமையும் பாரம்பரியம்' என்ற மையக்கருத்தின் அடிப்படையில் போட்டிகள் நடத்தப்பட்டது. ஒப்புவித்தல் போட்டி, கதை சொல்லு தல், வண்ணம் தீட்டுதல், மாறுவேட போட்டி, களிமண் பொம்மை செய்தல், மெல்லிசை பாடல், தேச பக்தி பாடல்கள், நாட்டுப்புற நடனம் தனி மற்றும் குழு பரதநாட்டியம், கோலப்போட்டி உள்ளிட்ட 54 பிரிவுகளில் போ ட்டிகள் நடைபெற்றது. ஒவ்வொரு போட்டியிலும் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் மாவட்ட அளவிலான போட்டிகளிலும், அதை தொடர்ந்து மாநில அளவிலான போட்டிகளிலும் கலந்து கொள்ள உள்ளனர்.--