1,500 மீட்டர் ஓட்டத்தில் சீறிய வீராங்கனைகள்
கோவை; தியாகி என்.ஜி. ராமசாமி நினைவு மேல்நிலைப் பள்ளி சார்பில் கிழக்கு குறுமைய தடகள போட்டிகள், கோவை நேரு ஸ்டேடியத்தில் நேற்று துவங்கியது; இன்று நிறைவடைகிறது. இதில், வீரர், வீராங்கனைகள், 1,200 பேர் பங்கேற்றனர். மாவட்ட கல்வி அலுவலர் கோமதி(இடைநிலை), மாவட்ட விளையாட்டு அலுவலர் புவனேஸ்வரி, என்.ஜி.ஆர்., பள்ளி தலைமையாசிரியர் சதாசிவம் ஆகியோர் போட்டிகளை துவக்கிவைத்தனர். 17 வயதுக்குட்பட்ட மாணவியருக்கான, 100 மீ., ஓட்டத்தில், இனியாஸ்ரீ, ரேஷ்மி, பூவிழி நர்சனா ஆகியோரும், 14 வயதுக்குட்பட்டோருக்கான, 400 மீ., ஓட்டத்தில், அஞ்சனா, அன்னலட்சுமி, பிரியா ஆகியோரும் முதல் மூன்று இடங்களை பிடித்தனர். 19 வயதுக்குட்பட்டோருக்கான, 1,500 மீ., ஓட்டத்தில் ஹன்சினி, ஹூமைதா பேகம், ஸ்ரீனா ஆகியோரும், 17 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான, 400 மீ., ஓட்டத்தில் ஹரிஷ், அபிஷேக் டேனியல், சபரிநாதன் ஆகியோரும் முதல் மூன்று இடங்களை வென்றனர். 19 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான நீளம் தாண்டுதலில் பிரின்ஸ் இமானுவேல், பிரணவ், கிஷோர் ஆகியோரும், 14 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான வட்டு எறிதலில், நிதிஷ், பிரவீன்குமார், மோனிஷ்குமார் ஆகியோரும் முதல் மூன்று இடங்களை வென்றனர்.