கூலி உயர்வு கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
சோமனுார், ; புதிய கூலி உயர்வு பெற்றுத்தர, அரசு நடவடிக்கை எடுக்க கோரி, கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்த, கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சங்க கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது. கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சங்க கூட்டமைப்பு நிர்வாகிகள் கூட்டம் சோமனூரில் நேற்று நடந்தது. சோமனுார் சங்க செயலாளர் கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். அவிநாசி சங்க தலைவர் முத்துசாமி, தெக்கலுார் தலைவர் பொனனுசாமி, சோமனுார் சங்க பொருளாளர் பூபதி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். கூலி உயர்வு பிரச்னையில் அரசின் கவனத்தை ஈர்க்க ஆர்ப்பாட்டம் நடத்துவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.கூட்டமைப்பு நிர்வாகிகள் கூறியதாவது :கடந்த ஒரு ஆண்டாக கூலி உயர்வு பேச்சுவார்த்தைகளில் ஜவுளி உற்பத்தியாளர்கள் பங்கேற்காதது கண்டனத்துக்குரியது. கோவை, திருப்பூர் மாவட்ட நிர்வாகங்கள், ஜவுளி உற்பத்தியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி கூலி உயர்வு பெற்றுத்தர வேண்டும். இதை வலியுறுத்தி, அவிநாசி, தெக்கலுார், பெருமாநல்லுார், சோமனுார் பகுதிகளில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம். வரும், ஜன., 26 ம் தேதி நடக்கும் பொதுக்குழுவில் ஆர்ப்பாட்ட தேதியை அறிவிக்க உள்ளோம். அதற்குள், அரசு இப்பிரச்னைக்கு தீர்வு காணவேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.