இருதரப்பினரிடையே அதிகரிக்கும் ஒத்துழைப்பு; ஆஸ்திரேலியா-இந்தியா சி.இ.ஓ., நம்பிக்கை
கோவை : ''கல்வி, தொழில்நுட்பம், உற்பத்தி சார்ந்த துறைகளில் இருவழியிலும் ஒத்துழைப்பு மேம்பட்டு வருகிறது,'' என, ஆஸ்திரேலியா-இந்தியா உறவு மைய தலைமை நிர்வாக அதிகாரி டிம் தாமஸ் பேசினார்.இந்திய தொழில் கூட்டமைப்பு(சி.ஐ.ஐ.,) உறுப்பினர்கள், ஆஸ்திரேலியா-இந்தியா உறவு மைய தலைமை நிர்வாக அதிகாரி டிம் தாமஸ், துணை கன்சல் ஜெனரல் டேவிட் எகிள்ஸ்டன் ஆகியோரை, கோவை ரெசிடென்ஸி ஓட்டலில் சந்தித்து கலந்துரையாடினர். அப்போது, டிம் தாமஸ் பேசியதாவது:ஆஸ்திரேலியாவிற்கும், சி.ஐ.ஐ.,க்கும் இடையேயான வேரூன்றிய தொடர்புகள், இருதரப்பு உறவுகளையும் ஆழப்படுத்துகிறது. மேலும், பொருளாதாரம், கலாசாரம், விளையாட்டு உள்ளிட்ட விஷயங்களில் ஈடுபாட்டை மேம்படுத்துகிறது.மேலும், துாய்மையான எரிசக்தி, விவசாயம், கல்வி, பாதுகாப்பு, விண்வெளி, மருத்துவ தொழில்நுட்பம், விளையாட்டு போன்ற துறைகளில் குறிப்பிடத்தக்க ஒத்துழைப்பு திறன் அதிகரிக்கிறது. குறிப்பாக, கல்வி, தொழில்நுட்பம், உற்பத்தி மற்றும் புத்தாக்கம் சார்ந்த துறைகளில் இருவழியிலும் ஒத்துழைப்பு மேம்பட்டு வருகிறது.இவ்வாறு, அவர் பேசினார்.சி.ஐ.ஐ., கோவை மண்டல முன்னாள் தலைவர் அசோக் பக்தவத்சலம் பேசுகையில்,''தமிழகத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 14 சதவீதத்துடன் முக்கிய பொருளாதார பங்களிப்பாளராக கோவை திகழ்கிறது. ஜவுளி, பொறியியல், ஆட்டோமொபைல் பாகங்கள், பம்ப், சுவிட்ச் கியர்கள் மற்றும் வால்வுகள் போன்றவற்றில் நாட்டின் தேவையை கோவை பூர்த்தி செய்துவருகிறது,'' என்றார். கே.ஜி., குழும நிறுவனங்களின் தலைவர் பக்தவத்சலம், சி.ஐ.ஐ., துணை தலைவர் நவுசத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.