கூட்டுறவின் முக்கியத்துவம் பள்ளிகளில் விழிப்புணர்வு
கோவை : அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில், ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களிடம் கூட்டுறவுச் செயல்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், சிறப்பு போட்டிகள் நடத்தப்பட்டன.சித்தாபுதுார் மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற இந்நிகழ்வில், 'நான் பார்த்த கூட்டுறவு சங்கத்தின் கதை' என்ற தலைப்பில் கதை சொல்லுதல், 'சமூக பொருளாதார முன்னேற்றத்தில் கூட்டுறவின் பங்களிப்பு' என்ற தலைப்பில் பேச்சுப்போட்டி மற்றும் 'அனைவருக்கும் கூட்டுறவு, அனைத்தும் கூட்டுறவு' என்ற தலைப்பில் கட்டுரை போட்டி ஆகியன நடைபெற்றன.இப்போட்டிகளில், கோவையை சேர்ந்த, 30க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து, 70க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். கதை சொல்லுதல் போட்டியில், ஒக்கலிகர் காலனி மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி மாணவர் சூர்யா, பேச்சுப்போட்டியில், செல்வபுரம் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி மாணிக்கவல்லி, கட்டுரை போட்டியில், ஒப்பணக்கார வீதி மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி சுபஸ்ரீ ஆகியோர் முதலிடம் பெற்றனர்.இந்நிகழ்வை ஒருங்கிணைத்த ஒருங்கிணைப்பாளர் முருகேசன் கூறுகையில், “மாணவர்களின் சிந்தனையும், கற்பனை திறனையும் ஊக்குவிக்கும் வகையில் இவ்வகை போட்டிகள் தொடர்ந்து நடத்தப்படும்,” என தெரிவித்தார்.