சுற்றுச்சூழலை பாதுகாக்க விழிப்புணர்வு மணல் சிற்பம்
பொள்ளாச்சி : பொள்ளாச்சியில், உலக சாதனை நிகழ்வு பதிவுக்காக, கிணத்துக்கடவு அரசுப்பள்ளி மாணவர்கள், சுற்றுச்சூழலை பாதுகாக்கக் வலியுறுத்தி மணல் சிற்பம் உருவாக்கினர்.பொள்ளாச்சியில் தன்னார்வ அமைப்புகள் சார்பில், கலாம் உலக சாதனைக்காக, தொடர்ந்து 36 மணி நேர கலாசார நிகழ்ச்சி மின்னல் மஹாலில் நடந்தது.இதில், பழங்குடியின மக்களின் பாரம்பரிய நடனம், ஒயிலாட்டம், மயிலாட்டம், காவடியாட்டம், வள்ளி கும்மி, படுகர் நடனம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் இடம் பெற்றன.அவ்வகையில், 36 நிகழ்ச்சிகளில், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, 1,056 பேர் கலந்து கொண்டு, தங்கள் திறமையை வெளிக்காட்டினர்.நேற்று, கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள், மணல் சிற்பம் கொண்டு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.அதனை உணர்த்தும் விதமாக, வனம் மற்றும் வனம் சார்ந்த உயிரினங்களை பாதுகாக்க வலியுறுத்தும் வகையில், மணல் சிற்பம் ஒன்றை உருவாக்கினர்.மாணவ, மாணவியரின் சிற்பம், காண்போரை வியப்படையச் செய்யும் வகையில் இருந்தது. இதில், பங்கேற்றவர் களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.