ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை கொண்டாட்டம் களை கட்டியது! கடை, தொழில் நிறுவனங்களில் விழாக்கோலம்
பொள்ளாச்சி : ஆயதபூஜையை முன்னிட்டு, நேற்று மாலை, கடைவீதிகளில் மக்கள் குவிந்த நிலையில், கடைவீதி, பூ மார்க்கெட் பகுதிகளில் விற்பனை களைகட்டியது.பொள்ளாச்சி நகர் மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களில், ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை, விஜயதசமி கொண்டாட்டங்கள் துவங்கியுள்ளது. இதனால், பொள்ளாச்சி பூ மார்க்கெட்டுக்கு, உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து பூ வரத்து அதிகரித்தது.இது ஒருபுறமிருக்க, சிலர், ரோட்டோரமாக தற்காலிக கடைகளை அமைத்து, பூஜை பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டனர். நேற்று, காலை முதலே மார்க்கெட்டிற்கு, மக்கள் கூட்டம் அதிகரித்தது. டூவீலர், இலகு ரக வாகனங்களில் பொருட்கள் வாங்க வந்த மக்களால், பாதசாரிகள் நடந்து செல்லக்கூட வழியில்லாமல் தடுமாறினர். பூ மார்க்கெட் முன் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.இதனால், போக்குவரத்து போலீசார் முன்னெச்சரிக்கையாக 'பேரிகார்டு'களை அமைத்து, பூ மார்க்கெட் முன் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர். மாலையில், இலகு மற்றும் கனரக வாகனங்கள் அவ்வழியே செல்ல தடை விதிக்கப்பட்டது.நேற்று செவ்வந்தி கிலோ, 280 ரூபாய்க்கு விற்றது. மல்லிகை 250 கிராம், 230 முதல், 300 ரூபாய்; அரளிப்பூ கிலோ, 300 முதல், 500 ரூபாய்க்கு விற்றது. மேலும், செண்டுமல்லி மாலை, 150 முதல் 200 ரூபாய்; சாமந்தி பூ தரத்திற்கு ஏற்ப, கிலோ, 160 முதல், 280- ரூபாய்; உதிரிப்பூக்கள் கிலோ, 300 ரூபாய்க்கும் விற்பனையானது. மக்கள் ஆர்வம்
இதேபோல, கடலை, பொரி மற்றும் மிட்டாய் வகைகள் விற்பனை களைகட்டியிருந்தது. ஆப்பிள், ஆரஞ்ச், மாதுளை, அன்னாசி, திராட்சை, எலுமிச்சை பழங்கள், வாழைக்கன்று, செங்கரும்பு, பூசணிக்காய் உள்ளிட்ட பொருட்களின் விற்பனையும் சூடுபிடித்திருந்தது. பூஜை பொருட்களை வாங்க, பொதுமக்கள் குடும்பத்துடன் வந்தனர். இதனால், கடைவீதி களைகட்டியது.தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்களை அழகுபடுத்துவதற்காக, வண்ண காகிதங்கள், தோரணங்கள் விற்பனைக்கு வந்துள்ளது, இவை, ரகத்திற்கு ஏற்ப, 40 ரூபாய் முதல், 1,200 ரூபாய் வரை விற்கப்பட்டது.ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை பொருட்கள் வாங்க, நகர மக்கள் மட்டுமின்றி, சுற்றுப்புற கிராமங்களிலிருந்தும் பொதுமக்கள் வந்ததால், பிரதான ரோடுகளில், பூஜை பொருட்கள், பூ விற்பனை கடைகள், கோலாகலமாக காணப்பட்டது.