வாசகர்கள் கருத்துகள் ( 1 )
நாய்க்கு எந்த கவலையும் இல்லை தின்பதற்கு உணவு செரிமானத்திற்கு உல்லாசம் அதை பார்த்து பொறாமை கொள்ள வேண்டாம்.... அதன் கர்ப காலமும், ஆயுளும் மிக குறைவு... ..
கோவை: கோவையில் தெருநாய்களுக்கு கருத்தடை சிகிச்சை செய்வதில் ஊழல் நடப்பதாக, காங்கிரஸ் கவுன்சில் குழு தலைவர் அழகு ஜெயபாலன், மாமன்ற கூட்டத்தில், பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.கோவை மாநகராட்சி பகுதியில், ஒரு லட்சத்து, 15 ஆயிரம் தெரு நாய்கள் இருப்பதாக, சமீபத்தில் எடுத்த கணக்கெடுப்பில் தெரியவந்தது. மூன்று நிறுவனங்கள் கருத்தடை சிகிச்சை அளிக்கின்றன. இதுநாள் வரை, 700 ரூபாய் கட்டணம் வழங்கப்பட்டது. நாய்களை பிடித்து வந்து, கருத்தடை செய்து மீண்டும் அதே இடத்தில் விடுவதற்கு, 200 ரூபாய், அறுவை சிகிச்சை செய்யவும் பராமரிக்கவும் 1,450 ரூபாய் சேர்த்து, 1,650 ரூபாய் வழங்க மன்றத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.இதுதொடர்பாக, அ.தி.மு.க., கவுன்சிலர் பிரபாகரன் கேள்வி எழுப்பியபோது, ''ஒரு தெருநாய்க்கு, 1,650 ரூபாய் கொடுத்தால், மாதம், 7,000 நாய்கள் பிடிப்பதாக சொல்கிறார்கள். அதன்படி கணக்கிட்டால், பல லட்சம் ரூபாய் செலவாகுமே,'' என்றார்.கிழக்கு மண்டல தலைவர் லக்குமி இளஞ்செல்வி குறுக்கிட்டு, ''தெருநாய் பெருக்கத்தை கட்டுப்படுத்த, அ.தி.மு.க., ஆட்சி காலத்தில், 10 ஆண்டுகளாக எந்த நடவடிக்கையும் எடுக்காதது தான், அவை பெருக காரணம். ஒரு லட்சம் தெருநாய்கள் சுற்றுவதற்கு அ.தி.மு.க,வே காரணம்,'' என்றார்.மத்திய மண்டல தலைவர் மீனா பேசுகையில், ''கருத்தடை செய்யப்பட்ட தெருநாய்கள் மீண்டும் குட்டி போடுகின்றன. யார் செய்த தவறு? தமிழக அரசுக்கும், மாநகராட்சிக்கும் அவப்பெயர் ஏற்படுகிறது,'' என்றார்.இவ்வாறு, விவாதம் நடந்தது.
காங்கிரஸ் கவுன்சில் குழு தலைவர் அழகு ஜெயபாலன் பேசுகையில், ''ஆர்.எஸ்.புரம் பகுதியில் தெருநாய்கள் அதிகமாக சுற்றுகின்றன. கருத்தடை சிகிச்சை செய்வதில் ஊழல் நடக்கிறது; தவறு நடக்கிறது. இவ்வளவு தொகை செலவு செய்வதற்குரிய, பலன் கிடைக்கிறதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும். தெருநாய்களை பிடிக்க வரும்போது கவுன்சிலர்களிடம் தெரிவித்தால், கண்காணிக்கலாம். ஊழலை ஏற்றுக்கொள்ள மாட்டோம்,'' என்றார்.
மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் பதிலளிக்கையில், ''வெள்ளலுாரில் கருத்தடை சிகிச்சை மையம் தயாராகிறது. கூடுதலாக இரண்டு மையம் கட்ட வேண்டும். அவற்றை பிடித்து சிகிச்சை செய்து, பராமரித்து பின்பே வெளியே விட வேண்டும். சிக்கலான பிரச்னை. தெருநாய்களுக்கு கருத்தடை செய்யும் பணி தீவிரப்படுத்தப்படும். நாய் பிடிக்க வரும்போது, கவுன்சிலர்களுக்கு கட்டாயம் தகவல் தெரிவிக்கப்படும்,'' என்றார்.
நாய்க்கு எந்த கவலையும் இல்லை தின்பதற்கு உணவு செரிமானத்திற்கு உல்லாசம் அதை பார்த்து பொறாமை கொள்ள வேண்டாம்.... அதன் கர்ப காலமும், ஆயுளும் மிக குறைவு... ..