யானையால் வாழை, தென்னை மரங்கள் சேதம்
மேட்டுப்பாளையம், ;விவசாய நிலங்களில், யானை புகுந்து வாழை, தென்னை மரங்களை சேதம் செய்துள்ளன.மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் யானைகள், காட்டு மாடுகள், மான்கள், சிறுத்தை என ஏராளமான வனவிலங்குகள் வசிக்கின்றன. இரவில் யானைகள் விவசாய நிலங்களில் புகுந்து, பயிர்களை சேதம் செய்து வருகின்றன. விவசாயிகள் தகவலின் பேரில், வனத்துறையினர் விவசாய நிலங்களில் உள்ள யானைகளை, விரட்டும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.மேட்டுப்பாளையம் அடுத்த தாசம்பாளையத்தை சேர்ந்த விவசாயி ராஜேந்திரன். இவரது தோட்டத்தில் தென்னை, வாழை ஆகியவற்றை பயிர் செய்துள்ளார். தென்னை மரங்கள் தற்போது தேங்காய் காய்க்கும் நிலையில் உள்ளன. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு, யானை ஒன்று இவர் தோட்டத்தில் புகுந்து, வாழை மரங்களையும், தென்னை மரங்களையும், கீழே தள்ளி சேதம் செய்துள்ளன. இதில் ஏராளமான வாழை மற்றும் தென்னை மரங்கள் சேதம் அடைந்தன.இது குறித்து பாதிக்கப்பட்ட விவசாயி மேட்டுப்பாளையம் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தார். வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து, சேதமடைந்துள்ள வாழை மற்றும் தென்னை மரங்களை கணக்கெடுத்து சென்றனர். யானைகளால் சேதமடைந்த வாழை மற்றும் தென்னை மரங்களுக்கு, தமிழக அரசு இழப்பீட்டு தொகை உடனடியாக வழங்க வேண்டும், என விவசாயி கூறினார்.