வாழ வைக்கும் வாழை! கன்று அதிகரிக்க மனு
கோவை; மானியத்தில் வழங்கப்படும் வாழைக் கன்றுகளின் எண்ணிக்கையை அதிகரித்துத் தர வேண்டும் என, தோட்டக்கலைத் துறைக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.அத்திக்கடவு கவுசிகா நதி மேம்பாட்டு சங்கம் சார்பில், தோட்டக்கலை துணை இயக்குனருக்கு அனுப்பியுள்ள மனு:கோவை மாவட்டத்தில், தோட்டக்கலைத் துறை சார்பில், விவசாயிகளுக்கு தென்னைக்குள் வாழை ஊடுபயிர் செய்ய, ஹெக்டருக்கு 125 திசு வளர்ப்பு வாழை மானியத்தில் வழங்கப்படுகிறது.ஒரு ஹெக்டருக்கு, 170 தென்னை மரங்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலையில், ஊடுபயிராக 125 வாழை மரங்கள் என்பது மிகக் குறைவு. எனவே, கள யதார்த்தைப் புரிந்துகொண்டு, அறிவியல் முறைப்படி திருத்தம் செய்து, எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.அதேபோன்று, பெரும்பாலான விவசாயிகள் உயர் விளைச்சல் ரகமான குவிம்டால் வாழை ரகத்தை விரும்பி சாகுபடி செய்கின்றனர். மானியத்தில் நாட்டு ரக திசு கன்றுகள் மட்டுமே வழங்கப்படுகின்றன. எனவே, உயர் விளைச்சல் ரகத்தை மானியத்தில் வழங்க வேண்டும்.மேலும், மானியத் தொகையையும், முன்பு வழங்கியதைப் போன்றே பின்னேற்பு மானியமாக விவசாயிகளுக்கு நேரடியாக வழங்கினால், அவர்கள், தங்கள் மண்ணுக்குத் தகுந்த ரகம் மற்றும் தரமான நாற்றுகளைத் தேர்வு செய்து, ஊடுபயிர் செய்வர். விவசாயிகளுக்கும் பயன் அளிக்கும். திட்டமும் வெற்றி பெறும்.இவ்வாறு, மனுவில் கோரப்பட்டுள்ளது.