மேலும் செய்திகள்
பத்திரம் தொலைத்த வங்கி இழப்பீடு வழங்க உத்தரவு
04-Dec-2025
கோவை, டிச.19- வங்கியில் கடன் பெற, அடமானம் வைத்த பத்திரத்தை தொலைத்ததால், மூன்று லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டது. மசக்காளிபாளையம் ரோட்டை சேர்ந்த செந்தில்குமார்,50, மனைவி சங்கீதா, 44, ஆகியோர், பூமார்க்கெட் உஜ்ஜிவன் ஸ்மால் பைனான்ஸ் வங்கியில், 2017 ல், 4.5 லட்சம் ரூபாய் கடன் வாங்கினர். நில பத்திரம் உள்ளிட்ட ஆவணங்களை அடமானமாக கொடுத்தனர். கடந்தாண்டு மார்ச் மாதத்துடன் மொத்த கடனையும் அடைத்து விட்டனர். அடமானம் வைத்த பத்திரம் உள்ளிட்ட ஆவணங்களை வங்கி திருப்பி கொடுக்கவில்லை. பத்திரம் தொலைந்துவிட்டதாக கூறினர். போலீசில் புகார் அளித்து, தொலைந்து போனதற்கான சான்றிதழை வாங்கி தருகிறோம்; அதை காட்டி நீங்கள் மாற்று ஆவணங்கள் பெறலாம் என்று வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆனால், அதன் பிறகு பல மாதங்களாகியும் போலீஸ் சான்றிதழ் பெற்று தரவில்லை. பத்திரம் இல்லாததால், செந்தில், சங்கீதா தம்பதியால் சொந்த நிலத்தை விற்க முடியாத நிலை ஏற்பட்டது. தொலைந்த பத்திரத்திற்கான சான்றிதழ் மற்றும் இழப்பீடு வழங்க கோரி, கோவை நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தாக்கல் செய்தனர். ஆணைய தலைவர் தட்சிணாமூர்த்தி, உறுப்பினர் சுகுணா ஆகியோர் விசாரித்தனர். 'காணாமல் போன பத்திரத்திற்கு வங்கி நிர்வாகம் இனியும் தாமதிக்காமல் காவல் துறை சான்றிதழ் பெற்று மனுதாரர்களுக்கு கொடுக்க வேண்டும்; மனுதாரர்களுக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு இழப்பீடாக, 3 லட்சம் ரூபாய், வழக்கு செலவு 10,000 ரூபாய் வழங்க வேண்டும்' என்று உத்தரவிட்டனர்.
04-Dec-2025