சக்கரங்களில் சிக்கி பலியாவதை தடுக்க தனியார் பஸ்களிலும் தடுப்பு கட்டமைப்பு
கோவை; தனியார் டவுன் மற்றும் மொபசல் பஸ்களில், பிற வாகன ஓட்டிகள் சக்கரத்தில் சிக்குவதை தடுப்பதற்கான புதிய தடுப்பு கட்டமைப்பை ஏற்படுத்த, போக்குவரத்து போலீசார் உத்தரவிட்டுள்ளனர்.அரசு டவுன் பஸ்களில், டயர்களுக்கு அடியில் சிக்கி ஏற்படும் விபத்துகளை தடுக்க, பாதுகாப்பு சட்டங்கள் பொருத்தப்பட்டுள்ளன. இடதுபுறம் பஸ் படிக்கட்டுகளுக்கு இடையே உள்ள, 8 அடி இடைவெளியிலும், வலதுபுறம் கீழ் பகுதியில், 12 நீளத்துக்கும், ஒன்றரை அடி அகலத்தில், இரும்பு ஆங்கிள்கள் அமைக்கப்பட்டுள்ளன; அவற்றின் மீது, இளஞ்சிவப்பு நிற 'பிளாஸ்டிக் ஷீட்' தொங்கவிட்டுள்ளது.கோவையில் இயக்கப்படும் தனியார் டவுன்பஸ்கள், மொபசல் பஸ்களிலும் இக்கட்டமைப்பை ஏற்படுத்த, போக்குவரத்து போலீசார் உத்தரவிட்டுள்ளனர். இம்மாத இறுதிக்குள் இக்கட்டமைப்பை, அனைத்து தனியார் பஸ்களிலும் பொருத்த உத்தரவிடப்பட்டுள்ளது.கோவை மாநகர போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனர் அசோக்குமார் கூறுகையில், ''அரசு பஸ்களை பின்பற்றி, தனியார் பஸ்களிலும் விபத்து தடுப்பு கட்டமைப்பு ஏற்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து கடந்த மாதம், அனைத்து தனியார் பஸ் உரிமையாளர்களுடன் கூட்டம் நடத்தி, அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.இம்மாத இறுதிக்குள் கட்டமைப்பை ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. கோவையில் தனியார் பஸ்கள் வேகமாக செல்வது, போக்குவரத்து விதிகளை கடைபிடிக்காதது குறித்து தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது. விதிமீறுபவர்கள் மீது, வழக்கு பதிந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது,'' என்றார்.