வேலை வழங்க கோரி பயனாளிகள் ஆர்ப்பாட்டம்
பொள்ளாச்சி; ஊரக வேலை உறுதி திட்டத்தை பாதுகாக்க கோரி, விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில், பொள்ளாச்சி வடக்கு, தெற்கு, ஆனைமலை, கிணத்துக்கடவு ஒன்றியங்கள் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட பொருளாளர் மகாலிங்கம், தாலுகா குழு உறுப்பினர் கனகராஜ், தாலுகா செயலாளர் பட்டீஸ்வரமூர்த்தி, தாலுகா தலைவர் பழனிசாமி மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர். இதில், அனைத்து ஊராட்சிகளிலும் வேலை உறுதி திட்டத்தில் அட்டை பெற்றுள்ள அனைவருக்கும் நிபந்தனையின்றி தொடர்ச்சியாக வேலை வழங்க வேண்டும். அனைத்து ஊராட்சிகளிலும் உடனே வேலையை துவங்க வேண்டும். வேலை வழங்காத நாட்களுக்கு வேலையில்லா காலபடியை வழங்குவதை உறுதிப்படுத்த வேண்டும். காலதாமதமாக வழங்கப்படும் ஊதியத்துக்கு உச்சநீதிமன்ற உத்தரவை மதித்து வட்டியை சேர்த்து வழங்க வேண்டும். இவை உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.