பாரதியார் பல்கலை பேட்மின்டன் போட்டி: ராமகிருஷ்ணா கலை கல்லுாரி சாம்பியன்
கோவை : பாரதியார் பல்கலைக்கு உட்பட்ட கல்லுாரிகளுக்கு இடையேயான 'பேட்மின்டன்' போட்டியில், ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லுாரி வெற்றி வாகை சூடியது.பாரதியார் பல்கலைக்கு உட்பட்ட கல்லுாரிகளுக்கு இடையே பெண்களுக்கான 'பேட்மின்டன்' போட்டிகள் பி.எஸ்.ஜி., கலை அறிவியல் கல்லுாரியில் இரு நாட்கள் நடந்தது. இதில், கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு என பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த, 20க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன.'நாக்-அவுட்' முறையிலான போட்டிகளை அடுத்து, 'லீக்' முறையில் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லுாரி, 2-0 என்ற செட் கணக்கில் டாக்டர் என்.ஜி.பி., கலை அறிவியல் கல்லுாரியையும், பி.எஸ்.ஜி., கலை அறிவியல் கல்லுாரி அணி, 2-0 என்ற செட் கணக்கில் குமரகுரு லிபரல் கலை அறிவியல் கல்லுாரி அணியையும் வென்றன.ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லுாரி அணி, 2-0 என்ற செட் கணக்கில் குமரகுரு கல்லுாரி அணியையும், பி.எஸ்.ஜி., கல்லுாரி அணி, 2-0 என்ற செட் கணக்கில் டாக்டர் என்.ஜி.பி., கல்லுாரி அணியையும், குமரகுரு கல்லுாரி அணி, 2-1 என்ற செட் கணக்கில் டாக்டர் என்.ஜி.பி., கல்லுாரி அணியையும் வெற்றி பெற்றன.ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லுாரி அணி, 2-1 என்ற செட் கணக்கில் பி.எஸ்.ஜி., கல்லுாரி அணியையும் வென்றது. போட்டிகளின் நிறைவில், ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லுாரி அணி 'சாம்பியன்' பட்டம் பெற்றது. இரண்டாம் இடத்தை, பி.எஸ்.ஜி., கலை அறிவியல் கல்லுாரி வென்றது.மூன்றாம் இடத்தை குமரகுரு கல்லுாரியும், நான்காம் இடத்தை டாக்டர் என்.ஜி.பி., கல்லுாரி அணியும் பிடித்தன. முதலிடம் பிடித்த, ராமகிருஷ்ணா கல்லுாரி மகளிர் அணியினரை, எஸ்.என்.ஆர்., சன்ஸ் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் லட்சுமி நாராயணசுவாமி, கல்லுாரி முதல்வர் சிவக்குமார் ஆகியோர் பாராட்டினர்.