உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நெடுஞ்சாலையில் பெரும் பள்ளங்கள்; வாகன ஓட்டுநர்கள் அச்சம்

நெடுஞ்சாலையில் பெரும் பள்ளங்கள்; வாகன ஓட்டுநர்கள் அச்சம்

பொள்ளாச்சி ; பொள்ளாச்சி, மரப்பேட்டை முதல், ஊஞ்சவேலாம்பட்டி வரையான நான்கு வழிச்சாலையில், மழையால் பெரும் பள்ளங்கள் ஏற்பட்டும், சீரமைக்கப்படாததால், வாகனங்கள் விபத்துக்குள்ளாகின்றன.பொள்ளாச்சி அருகே, மரப்பேட்டை முதல் ஊஞ்சவேலாம்பட்டி வரையிலான தேசிய நெடுஞ்சாலை, 4.5 கி.மீ., துாரம் உள்ளது. இந்த சாலையில், போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துக்களை தடுக்க, சென்டர்மீடியன், சர்வீஸ் ரோடு அமைக்கப்பட்டுள்ளது.சமீபத்தில், பெய்த மழையினால், நான்கு வழிச்சாலையில் உள்ள ஜல்லிக்கற்கள் பெயர்ந்து ஆங்காங்கே பெரும் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது. சில பகுதிகளில் மட்டுமே 'பேட்ச் ஒர்க்' செய்யப்பட்டும், பயனின்றி உள்ளது.இதனால், இரவில் பள்ளங்களை அடையாளம் காண முடியாமல் வாகன ஓட்டுநர்கள், விபத்தில் சிக்குகின்றனர். குறிப்பாக, மின்நகர் அருகே, பெரும் பள்ளம் ஏற்பட்டும் சீரமைக்கப்படாமல் உள்ளது. வாகன ஓட்டுநர்களை எச்சரிக்கும் வகையில் அறிவிப்பும் கிடையாது. விபத்தை தடுக்கும் விதமாக சாலையை புதுப்பிக்க நெடுஞ்சாலைத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இது ஒருபுறமிருக்க, சாலையொட்டிய பாதுகாப்பு தடுப்பு கம்பிகள் அனைத்தும் சேதடைந்துள்ளன. மக்களும், வாகனங்களின் இயக்கத்தை பொருட்படுத்தாமல் ஹாயாக சாலையை கடக்க முற்படுகின்றனர்.இதேபோல, பாலக்காடு ரோடு, ரயில்வே மேம்பாலத்திலும் பெரும் பள்ளம் ஏற்பட்டும் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. இருசக்கர வாகனங்களில் செல்வோர், நிலை தடுமாறி கீழே விழுந்து படுகாயமடைகின்றனர்.வாகன ஓட்டுநர்கள் கூறியதாவது:போக்குவரத்து நிறைந்த ரோட்டில் பெரும் பள்ளங்கள் இருப்பது கண்டறியப்பட்டால், உடனே சீரமைப்பு பணியை மேற்கொள்ள வேண்டும். நெடுஞ்சாலையில் தடை ஏதும் இருக்காது என, கருதும் ஓட்டுநர்கள், வேகமாக வாகனத்தை இயக்குகின்றனர். பள்ளத்தை கண்டு வேகத்தை குறைக்க முற்பட்டால், பின்னால் வரும் வாகனங்கள் மோதி விபத்து ஏற்படுகிறது.இரவில் அதிவேகமாக வாகனங்களில் செல்வோர், திடீரென பள்ளங்களைக் கண்டு, வேகத்தை குறைக்க முற்பட்டாலோ, திசை திருப்ப முயன்றாலோ விபத்து ஏற்படும் சூழல் உள்ளது. போக்குவரத்து நிறைந்த சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளத்தை விரைந்து சீரமைக்க வேண்டும்.இவ்வாறு, கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை