சாலை மையத்தடுப்பில் விளம்பர பலகை; பூங்கா அமைப்பதாக அனுமதி வாங்கி விதிமீறல்
கோவை; ஐகோர்ட் உத்தரவு மற்றும் தமிழக அரசின் விதிமுறையை மீறி, கோவையில் சாலையின் மையத்தடுப்பு பகுதியில், விளம்பரம் செய்வதற்கு அழைப்பு விடுத்து, மாநகராட்சி லோகோ பயன்படுத்தப்பட்டு, விளம்பர பலகை வைக்கப்பட்டுள்ளது. இது, தமிழக அரசின் உத்தரவை அப்பட்டமாக மீறிய செயல். வாகன ஓட்டிகளின் கவனத்தை சிதறடிக்கும் வகையில், சாலை சந்திப்புகள் மற்றும் சாலை திருப்பங்களில் விளம்பர பலகைகள் வைக்கக் கூடாது என, சென்னை ஐகோர்ட் ஏற்கனவே அறிவுறுத்தல் வழங்கியிருக்கிறது. கோவை மாநகராட்சியில் அதை பொருட்படுத்தாமல், அனுமதி தரப்படுகிறது. சில இடங்களில் அனுமதியின்றியும், விளம்பர பலகைகள் வைக்கப்பட்டு வருகின்றன. நகர் முழுவதும், அனுமதியின்றி வைக்கப்பட்டிருக்கும் விளம்பர பலகைகளை அகற்றாமல், மாநகராட்சி நகரமைப்பு பிரிவினர் அலட்சியமாக செயல்படுகின்றனர். இச்சூழலில், 100 அடி ரோட்டில் உள்ள மையத்தடுப்பு பகுதியில், விளம்பர பலகைகள் வைப்பதற்கு அணுகலாம் என, தனியார் விளம்பர ஏஜன்சி பெயரில், கோவை மாநகராட்சி லோகோ மற்றும் மாநகராட்சி பெயர் பயன்படுத்தப்பட்டு, விளம்பர பலகை வைக்கப்பட்டு உள்ளது. அந்த விளம்பர பலகையில், மையத்தடுப்பு பூங்காவை தனியார் அறக்கட்டளை பராமரிப்பதாகவும் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. பூங்கா அமைக்க அனுமதி பெற்று விட்டு, தனியார் விளம்பரங்கள் செய்ய பயன்படுத்தப்படுகிறதா என்கிற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. எதுவாக இருந்தாலும், இது, தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் விதி - 2023, பிரிவு 339 (5)(e), 341 (2)ன் கீழ் விதிமீறல். இச்சட்டப் பிரிவுகளில் சாலையின் மையத்தடுப்பில் விளம்பர பலகைகள் வைக்கக் கூடாது என்பது தெளிவாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது. அச்சட்டத்தை மீறுவதற்கு மாநகராட்சி அதிகாரிகள் உடந்தையாக இருக்கிறார்கள். ஏனெனில், சாலை மையத்தடுப்புகளில், 12 இடங்களில் பூங்கா அமைப்பதாக, மாநகராட்சியில் அனுமதி பெற்று விட்டு, இதுபோல் விளம்பர பலகைகள் வைப்பதற்கு திட்டமிடப்பட்டு இருக்கும் தகவல், வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. மாநகராட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தியதற்காக, அரசு விதியை மீறி ஏற்கனவே வழங்கப்பட்ட அனுமதியை, உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.
'பூங்கா அனுமதி தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது'
மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரனிடம் கேட்டபோது, ''மையத்தடுப்புகளில் விளம்பர பலகை வைக்க அனுமதி கொடுக்கவில்லை. பூங்கா அமைக்க அனுமதி தரப்பட்டது; அந்த அனுமதி தவறாக பயன்படுத்தப்பட்டிருக்கிறது. விளம்பர பலகைகள் உடனடியாக அகற்றப்படும். மாநகராட்சி லோகோ பயன்படுத்தியது தொடர்பாக, குற்றவியல் நடவடிக்கை எடுக்க, துறை அலுவலர்களுடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும்,'' என்றார்.