உயிரியல் தேர்வு சற்று கடினம்; வரலாறு எளிது! பிளஸ் 1 மாணவர்கள் கருத்து
உயிரியல், தாவரவியல் பொதுத்தேர்வு சற்று கடினமாக இருந்ததாக, பிளஸ் 1 மாணவ, மாணவியர் தெரிவித்தனர்.பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், பிளஸ் 1 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு, 38 மையங்களில் நேற்று நடந்தது. மாணவர்கள், உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம், புள்ளியியல் தேர்வுகளை எதிர்கொண்டனர்.தேர்வு குறித்து கந்தசாமிமெட்ரிக் பள்ளிமாணவர்கள் கருத்து:பிரின்சி: உயிரியல் தேர்வு சற்று கடினமாக இருந்தது. கட்டாய வினாக்களில் மூன்று மதிப்பெண் வினாக்கள், அகவினாக்களாக இருந்தன. ஏற்கனவே, அகவினாக்களை முறையாக படித்து, பயிற்சி எடுத்திருந்ததால், தேர்வை எளிமையாக எதிர்கொண்டேன். ஒரு மதிப்பெண் வினாக்களில், 50 சதவீதம், அகவினாக்களாக இருந்தன. இதேபோல், உயிரி-விலங்கியல், 5 மதிப்பெண் வினாக்களில் ஒன்று, அகவினாவாக இடம்பெற்றிருந்தது. முழு மதிப்பெண் கிடைக்கும் என, எதிர்பார்க்கிறேன்.தன்வந்த்: உயிரியல் தேர்வு கடினமாக இருந்தது. தேர்வில் இடம்பெற்றிருந்த வினாக்களில் பெரும்பாலானவை, அகவினாக்களாக இடம்பெற்றிருந்தது. தாவரவியலில் மூன்று மதிப்பெண்ணும், ஒரு ஐந்து மதிப்பெண் வினாவும், இரண்டு மதிப்பெண்களில் மூன்று, அகவினாக்களாக இருந்தது. விலங்கியலில் ஒரு மதிப்பெண், ஐந்து மதிப்பெண் வினாக்கள் அகவினாவாக இருந்தது. தீவிர பயிற்சி மேற்கொண்டிருந்ததால், தேர்வை விரைந்து எழுதினேன். அதிக மதிப்பெண்கள் கிடைக்கும்.* வடசித்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கருத்து:விக்னேஷ்: உயிரியல் தேர்வு கடினமாக இருக்கும் என, பயத்தில் இருந்தேன். ஆனால், இரண்டு மதிப்பெண் வினாக்களில் இரண்டு மட்டும் கடினமாக இருந்தது. மற்ற அனைத்து வினாக்களும் எளிமையாக இருந்தது. தேர்வு எழுதி முடிக்க நேரம் சரியாக இருந்தது. அதிக மதிப்பெண் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.கவுசிக்: உயிரியல் தேர்வில், ஒன்று மற்றும் இரண்டு மதிப்பெண் வினாக்கள் சற்று கடினமாக இருந்தது. பாடத்தின் உள்பகுதியில் இருந்து வினாக்கள் கேட்கப்பட்டிருந்தது. பாடம் முழுதும் நன்றாக பயிற்சி செய்திருந்ததால், தேர்வை நன்றாக எழுதினேன். அரை மணி நேரத்திற்கு முன் தேர்வு எழுதி முடிக்க முடிந்தது. அதிக மதிப்பெண் கிடைக்கும்.* வால்பாறை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவியர் பேட்டி வருமாறு:காவியா: உயிரியல் தேர்வை பொறுத்தவரை ரொம்ப கஷ்டம்னு சொல்ல முடியாது, ரொம்ப ஈசினும் சொல்ல முடியாது. சில வினாக்கள் கடினமாக இருந்தது. பல வினாக்கள் படித்த பாடத்தில் இருந்து கேட்கப்பட்டதால், தேர்வை நல்ல முறையில் எழுதியுள்ளேன். அதிக மதிப்பெண்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.மனிஷாகுமாரி: வரலாறு பாடத்தை பொறுத்த வரை, வினாக்கள் ஈசியாக கேட்கபட்டதால், தேர்வை நல்ல முறையில் எழுதியுள்ளேன். ஒரு மதிப்பெண்களுக்கான ஒரு வினாவும், 5 மதிப்பெண்களுக்கான ஒரு வினாவும் கடினமாக இருந்தது. மற்றபடி அனைத்து வினாக்களுக்கும் விடை எழுதியுள்ளேன். அதிக மதிப்பெண் கிடைக்கும்.* பூலாங்கிணர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கருத்து:ரவி: உயிரியல் பாடத்தேர்வு வினாத்தாள் சற்று கடினமாக இருந்தது. தாவரவியல் பகுதியில் ஐந்து மதிப்பெண் வினாக்கள் மிகவும் கடினமாக இருந்தன.ஒரு மதிப்பெண் மற்றும் இரண்டு மதிப்பெண் பகுதியில், பாடப்பகுதிகளின் உள்ளிருந்து அதிகமான வினாக்கள் கேட்கப்பட்டன. விலங்கியல் பகுதியில் வினாக்கள் ஓரளவு எளிமையாக இருந்தது.சச்சின்பிரசாந்த்: உயிரியல் தேர்வு இவ்வளவு கடினமாக வருமென எதிர்பார்க்கவில்லை. எதிர்பார்த்த வினாக்கள் எதுவும் கேட்கவில்லை. பல வினாக்கள் குழப்பும் வகையிலும், பாடப்பகுதிகளின் உள்ளிருந்தும் கேட்கப்பட்டதால் விடை எழுதுவதற்கு நீண்ட நேரம் தேவைப்பட்டது. ஒரு மதிப்பெண் பகுதியில் வினாக்கள் கடினமாகவே இருந்தது.