ரூ.10 லட்சம் பறித்த பா.ஜ., நிர்வாகி பதவி பறிப்பு: மூன்று பேர் கைது
அன்னுார் : சாலை விபத்து இழப்பீட்டு தொகையில் மிரட்டி கமிஷன் பெற்றதாக, பா.ஜ., நிர்வாகி உட்பட மூவர் கைது செய்யப் பட்டனர். கோவை மாவட்டம், அன்னுார் அடுத்த குமாரபாளையத்தை சேர்ந்தவர் நாகராஜ், 53, காய்கறி வியாபாரி. மனைவி நாகமணி. இவர்களுக்கு இரண்டு மகன்கள். மூத்த மகன் திருமூர்த்தி தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். கடந்த 2023 ஜூலை 5ம் தேதி அன்னுார் - மேட்டுப்பாளையம் சாலையில் இரு சக்கர வாகனத்தில் செல்லும்போது லாரி மோதி திருமூர்த்தி இறந்து விட்டார். இந்நிலையில், நாகராஜ் அன்னுார் போலீசில் நேற்று முன்தினம் புகார் கொடுத்தார். அதில், அவர் கூறியுள்ளதாவது: சாலை விபத்தில் இறந்த எனது மகன் திருமூர்த்தி தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்தில், 50 லட்சம் ரூபாய்க்கு காப்பீடு எடுத்திருந்தார். கோகுல கண்ணன், 26, அவரது நண்பர்கள் ராஜராஜசாமி, 43, பா.ஜ., கோவை வடக்கு மாவட்ட செயலர், ராஜேஷ், 27, ஆகியோர் காப்பீட்டு தொகை பெற உதவுவதாக கூறினர். கடந்த மார்ச் மாதம் 50 லட்சம் ரூபாய் காப்பீட்டு தொகை கிடைத்தது. இதில் மூவரும் எங்களிடம் 10 லட்சம் ரூபாய் கமிஷனாக மிரட்டி பெற்று விட்டனர். கமிஷன் கொடுத்தது குறித்து சமூக வலைதளங்களில் எனது இளைய மகன் அருணாசலம் பதிவேற்றம் செய்தார். இதையடுத்து, மூவரும் எங்களிடம் இது போல சமூக வலைதளங்களில் ஏன் பதிவிட்டீர்கள் என்று கூறி, மிரட்டல் விடுத்து மேலும் 10 லட்சம் ரூபாய் தருமாறு மிரட்டினர். மூவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார். புகாரின் படி, அன்னுார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். விசாரணையில், கோகுல கண்ணன், ராஜராஜசாமி, ராஜேஷ் ஆகிய மூவரும் நாகராஜை மிரட்டி, 10 லட்சம் ரூபாய் பறித்தது உறுதியானது. இதையடுத்து அவர்கள் மூன்று பேரையும் நேற்று காலை போலீசார் கைது செய்தனர். அதை தொடர்ந்து அன்னுார் கோர்ட்டில் அவர்கள் ஆஜர்படுத்தப்பட்டனர். பின், கோவை மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனர். நீக்கம் 'பா.ஜ., நிர்வாகி ராஜராஜ சாமி கைது செய்யப்பட்டதை தொடர்ந்து அவர் வடக்கு மாவட்ட செயலர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக விடுவிக்கப்படுகிறார்' என, பா.ஜ., கோவை வடக்கு மாவட்ட தலைவர் மாரிமுத்து அறிக்கையில் தெரிவித்துள்ளார்.