தி.மு.க., அரசை கண்டித்து 100 வீடுகளில் கருப்பு கொடி
அன்னூர்: தி.மு.க., அரசை கண்டித்து, அன்னூர் வட்டாரத்தில் 100 இடங்களில் கருப்பு கொடி ஏற்றப்பட்டது.தமிழகத்துக்கு எதிராக நடக்கும் கேரள முதல்வரையும், கர்நாடக துணை முதல்வரையும் சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கும் தி.மு.க., அரசை கண்டித்து, தமிழக முழுவதும் கருப்பு கொடியேற்றி எதிர்ப்பு தெரிவிக்கப்படும் என, தமிழக பா.ஜ., அறிவித்திருந்தது.இதன்படி அன்னூர் நகரம், தெற்கு, வடக்கு ஒன்றியங்களில், 100 இடங்களில் நிர்வாகிகள் வீடுகளில் நேற்று கருப்பு கொடி ஏற்றப்பட்டது. பா.ஜ., வடக்கு மாவட்ட தலைவர் மாரிமுத்து, தி.மு.க., அரசு தமிழகத்துக்கு செய்த துரோகங்கள் குறித்து பேசினார். தி.மு.க., அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.மேட்டுப்பாளையம், அவிநாசி, சூலூர் ஆகிய மூன்று தொகுதிகள் அடங்கிய கோவை வடக்கு மாவட்டத்தில், நூற்றுக்கணக்கான பா.ஜ., நிர்வாகிகள் வீடுகளில், கருப்பு கொடி ஏற்றப்பட்டுள்ளதாக மாவட்ட தலைவர் தெரிவித்தார்.