கொலை செய்யப்பட்ட மூதாட்டி உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை
அன்னுார்: கோவை அருகே ஆறு மாதங்களுக்கு முன் கொலை செய்யப்பட்ட மூதாட்டியின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. கஞ்சப்பள்ளியைச் சேர்ந்தவர் லோகேந்திரன், 33. பைனான்சியர். இவருக்கு ஜாய் மெட்டில்டா, 27 என்னும் மனைவியும், ஆறு வயது மகனும் உள்ளனர். அன்னுாரில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்த ஜாய் மெட்டில்டாவுக்கும், அதே அலுவலகத்தில் பணியாற்றிய கர்நாடகாவைச் சேர்ந்த நாகேஷ், 25. என்பவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இது கணவர் லோகேந்தினுக்கு தெரியாது. இந்நிலையில் லோகேந்திரனின் பாட்டி மயிலாத்தாள், 63, கடந்த ஏப்ரல் மாதம் இறந்தார். மயிலாத்தாள் மாரடைப்பால் இறந்ததாக கருதி உடலை கஞ்சப்பள்ளி மயானத்தில் உறவினர்கள் புதைத்து விட்டனர். ஜாய்மெட்டில்டாவின் கள்ளத் தொடர்புக்கு இடையூறாக இருந்த கணவர் லோகேந்திரனை கொலை செய்ய ஜாய்மெட்டில்டாவும், கள்ளக்காதலன் நாகேஷ் திட்டமிட்டனர். இதைத் தொடர்ந்து கடந்த மாதம் 23 ந் தேதி வீட்டில் துாங்கிக் கொண்டிருந்த லோகேந்திரனை தலையணையால் அமுக்கி கொலை செய்ய இருவரும் முயற்சித்தனர். ஆனால் அதில் இருந்து தப்பிய லோகேந்திரன் இதுகுறித்து அன்னுார் போலீசில் புகார் செய்தார். புகாரை தொடர்ந்து மனைவி ஜாய்மெட்டில்டா, கள்ளக்காதலன் நாகேஷ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில், ஜாய்மெட்டில்டாவின் கள்ளத்தொடர்பு லோகேந்திரனின் பாட்டி மயிலாத்தாளுக்கு தெரிந்ததால் அவரை இரண்டு பேரும் சேர்ந்து கொலை செய்து விட்டு இயற்கை மரணம் என்று நாடகமாடியது தெரியவந்தது. இருவரையும் போலீசார் கடந்த 11ம் தேதி காவலில் எடுத்து விசாரித்து விட்டு மீண்டும் சிறையில் அடைத்தனர். மேலும், கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட மயிலாத்தாளின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்ய போலீசார் முடிவு செய்தனர். நேற்று மதியம் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் சட்டம் சார்ந்த பேராசிரியர் மனோகரன் தலைமையில் நான்கு டாக்டர்கள் அடங்கிய குழு மற்றும் கோவை ரூரல் தடய அறிவியல் துறை உதவி இயக்குனர் பார்த்தசாரதி ஆகியோர் மயானத்திற்கு வந்தனர். நான்கடி ஆழத்தில் புதைக்கப்பட்டிருந்த மயிலாத்தாளின் உடல் தோண்டி எடுக்கப்பட்டது. பின்னர் அதே இடத்தில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. மருத்துவ குழுவினர் கூறுகையில்,' பிரேத பரிசோதனையில் தொடை எலும்பு, மண்டையோடு மற்றும் உடல் உள்ளுறுப்புகள் எடுக்கப்பட்டுள்ளன. இவை பரிசோதனைக்கு சென்னைக்கு அனுப்பப்படும்,' என்றனர். பிரேத பரிசோதனையின் போது தாசில்தார் யமுனா, இன்ஸ்பெக்டர் செல்வன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.