புதரில் மறைந்த தாவரவியல் பூங்கா; சிறுத்தை விசிட் செய்வதால் அச்சம்
வால்பாறை; வால்பாறையில், புதர் சூழ்ந்து காணப்படும் தாவரவியல் பூங்காவுக்கு சிறுத்தை 'விசிட்' செய்வதால், சுற்றுலா பயணியர் பீதியடைந்துள்ளனர்.வால்பாறையில், சுற்றுலா பயணியரை மகிழ்விக்க, நகராட்சி சார்பில், 5.6 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தாவரவியல் பூங்கா அமைக்கப்பட்டு, கடந்த, 2022ம் ஆண்டு செப்., மாதம் திறக்கப்பட்டது.அ.தி.மு.க., ஆட்சியில் துவங்கப்பட்ட தாவரவியல் பூங்கா தி.மு.க., ஆட்சியில் திறக்கப்பட்டதால், உள்ளூர் மக்களும் சுற்றுலாபயணியரும் மகிழ்ச்சியடைந்தனர்.ஆனால், தாவரவியல் பூங்காவில் ஒரு பூச்செடி கூட இல்லாததால், மிகுந்த எதிர்பார்ப்புடன் வரும் சுற்றுலா பயணியர் ஏமாற்றத்துடன் திரும்பிச்செல்கின்றனர். பூங்காவில் குழந்தைகள் விளையாட்டு பொருட்களும் சேதமடைந்த நிலையில் காணப்படுகின்றன.எல்லாவற்றுக்கும் மேலாக, பூங்காவில் போதிய பராமரிப்பு பணி செய்யாததால், ஒரு பகுதி புதர் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால், பூங்காவுக்கு சிறுத்தை அடிக்கடி 'விசிட்' செய்கிறது. இது தவிர, பாம்புகள் அதிக அளவில் உலா வருவதால், சுற்றுலா பயணியர் பூங்காவுக்குள் செல்ல அச்சப்படுகின்றனர். பராமரிப்பு இல்லாத பூங்கா சமீப காலமாக காட்சிப்பொருளாக மாறி வருவதால், சுற்றுலா பயணியர் விரக்தியடைந்துள்ளனர்.சுற்றுலா பயணியர் கூறுகையில், 'தாவரவில் பூங்காவில் உள்ள குழந்தைகள் விளையாட்டு உபகரணங்கள் சேதமடைந்த நிலையில் உள்ளன. மலர் செடிகள் இல்லை; கேண்டீன் திறக்கப்படவில்லை. பூங்காவில் உள்ள புதர்களை அகற்றி, மீண்டும் அழகுபடுத்த நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், 'பூங்காவை சுற்றியுள்ள புதரை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும். பூங்காவை அழகுபடுத்தும் விதமாக சுற்றிலும் புதிய மலர்கள் செடிகள் கொண்டுவரப்பட்டு, முறையாக பராமரிக்கப்படும். போதிய அடிப்படை வசதிகள் விரைவில் செய்துதரப்படும்,' என்றனர்.