| ADDED : டிச 05, 2025 07:19 AM
இ ன்று பெருநகரம் போல பரந்து வளர்ந்திருக்கும் கோவை, ஆங்கிலேயர்கள் முதல் முறையாக அடியெடுத்து வைத்த காலத்தில், வெறும் நான்கு தெரு எல்லைகளுக்குள் சுருங்கிய நகரம் ஆக இருந்தது. வடக்கே சுக்கிரவாரப் பேட்டை, கிழக்கே மீன்கடை வீதி, தெற்கே வைசியர் வீதி, மேற்கே சலிவன் வீதி. இவையே, அப்போதைய கோவையின் முழு நகர எல்லைகள். சுக்கிரவாரப் பேட்டையின் வடக்கில் புன்செய் தோட்டங்கள் பசுமையாகப் பரந்திருந்தன. அருகில், தேவப்பன் என பெயர் கொண்ட ஒரு தோட்டம் இருந்திருக்கிறது. அங்கிருந்த ஒரு கிணறு அக்கால மக்களின் நீராதாரமாக இருந்தன. ஒப்பணக்கார வீதிக்குப் பக்கமாக இருந்த இப்பகுதி தேவப்பன் தெரு என்றும் அழைக்கப்பட்டது. கிழக்கே மீன்கடை தெரு, இன்றைய நவாப் ஹகீம் தெரு என அழைக்கப்படுகிறது. அங்கு, அப்போதெல்லாம் கீரைத்தோட்டங்கள் இருந்தது. அவை பின்னர் எல்.எம்., பாடசாலை, ஒய்.எம்.சி.ஏ. போன்ற நிறுவனங்களின் நிலங்களாக மாறின. தெற்கே வைசியர் தெருவுக்கும் பெரிய ஏரிக்கும் இடைப்பட்ட இடத்தில் இருந்த கீரைத் தோட்டங்களும் நகர வளர்ச்சியால் இல்லாமல் போய்விட்டது. மேற்கே சலிவன் தெருவுக்கு அப்பால் வயல்கள் மட்டுமே பரந்து கிடந்தன. 1815-ம் ஆண்டு கலெக்டராக இருந்த சலிவனின் பெயரிலேயே அந்தத் தெரு உருவானது. கிழக்கு, மேற்கு திசையில் கோமுட்டி தெரு (இன்றைய வைசியாள் வீதி), பெரியகடைத் தெரு, ராஜவீதி, இடையர் வீதி, சுக்கிரவாரப் பேட்டை ஆகியவை நகரத்தின் முக்கிய உயிர்வழிகள். தென், வடதிசை தெருக்களில் சலிவன் வீதி, ஈசுவரன் கோயில் தெரு, சின்னகடைத் தெரு, ஒப்பணக்கார வீதி, மீன்கடை வீதி ஆகியவை நகரத்தில் இருந்த முக்கிய சாலைகள். ரங்கே கவுடர் தெரு என்பது கோவையில் இருக்கும் பெரிய கடை வீதியை போல் சின்ன கடை வீதியாக அறியப்படுகிறது. ரங்கே கவுடர் என்பவர் கோவையில் முதலில் மாடி வீடு கட்டிய நால்வரில் ஒருவர்.