புதுச்சேரியில் இருந்து பொள்ளாச்சிக்கு வந்த தடையை மீறும் துணிச்சல்! ஒரு டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
பொள்ளாச்சி; புதுச்சேரியில் இருந்து பார்சலில் வந்த, ஒரு டன் பிளாஸ்டிக் பொருட்களை நகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்து, 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். கடந்த, ஐந்து ஆண்டுகளில், 99.45 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், மண்ணுக்கும், பல்வேறு உயிரினங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய, ஒரு முறை பயன்படுத்தி வீசப்படும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.பிளாஸ்டிக் பொருட்களை விற்பனைக்காக நகரப்பகுதிக்கு கொண்டு வந்தாலோ, விற்பனை செய்தாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, வியாபாரிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவது குறித்து, சுகாதாரத்துறை அதிகாரிகள் அவ்வப்போது ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். ஆனாலும், அதன் பயன்பாடு குறைந்தபாடில்லை.பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு மறைமுகமாக உள்ளது. மேலும், வெளியூர்களில் இருந்து வாகனங்களில் டன் கணக்கில் கொண்டு வரப்படுகின்றன. இது குறித்து தகவல் அறிந்த நகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள், அவ்வப்போது வாகனங்களை பரிசோதனை செய்து பறிமுதல் செய்து வருகின்றனர்.இந்நிலையில், நேற்று, நகராட்சி கமிஷனர் கணேசன் உத்தரவின்படி நகர்நல அலுவலர் தாமரைக்கண்ணன் மற்றும் சுகாதார ஆய்வாளர் சிவக்குமார் மற்றும் அதிகாரிகள் குழு ஆய்வு மேற்கொண்டது.பொள்ளாச்சி அரசு கலைக்கல்லுாரி ரோட்டில், தனியார் கூரியர் அலுவலகத்தில் ஆய்வு செய்தனர். அப்போது தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் மூட்டை, மூட்டையாக பார்சலில் வந்ததை கண்டறிந்தனர்.இது குறித்து, பார்சல் சர்வீஸ் ஊழியர்களிடம் நகராட்சி அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். அவர்கள், 'புதுச்சேரியில் இருந்து, பொள்ளாச்சி வெங்கட்ரமணன் வீதியில் உள்ள ஒரு கடைக்கு பார்சல் வந்துள்ளதாகவும்; அதில் என்ன உள்ளது என தெரியாது,' என, பதில் அளித்தனர்.இதையடுத்து, பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்த நகராட்சி அதிகாரிகள், பிளாஸ்டிக் பொருட்களை, 'ஆர்டர்' செய்த உரிமையாளருக்கு அபராதம் விதித்தனர்.சுகாதார பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:நகராட்சிக்கு உட்பட்ட கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் ஆய்வு செய்து, அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தும் நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. கடந்த, 2019ம் ஆண்டு முதல் இதுவரை, 99.45 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதற்கு, 4.88 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.மேலும், பள்ளி, கல்லுாரிகள், சந்தைகள் மற்றும் வணிக நிறுவனங்களில், பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தக்கூடாது என விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. இந்நிலையில், வெளியூர்களில் இருந்து சரக்கு வாகனம், பார்சல் சர்வீஸ் வாகனங்கள் வாயிலாக, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு வரப்பட்டால், பறிமுதல் செய்யப்படுகிறது.நேற்று, புதுச்சேரியில் இருந்து பொள்ளாச்சியில் உள்ள ஒரு கடைக்கு கொண்டு வரப்பட்ட, ஒரு டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதற்கு, 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.
மனதளவில் மாற்றம் தேவை!
சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு, அத்தியாவசியமான ஒன்றாகி விட்டது. அன்றாட வாழ்வில், துணிப் பைகளை கொண்டு செல்வதை தவிர்த்து, பிளாஸ்டிக் பைகளில் வாங்குவது பேஷனாக உள்ளது.ஒரு முறை பயன்படுத்தி வெளியே வீசப்படும் பிளாஸ்டிக் மக்குவதில்லை. மண்ணை பாதிப்பதோடு, அதை உண்ணும் கால்நடைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. ஒரு சிலர், பயன்படுத்திய பிளாஸ்டிக்கை குப்பையோடு போட்டு எரிப்பதால், மனிதர்களுக்கு பல்வேறு உடல்உபாதைகள் ஏற்படுகிறது. ஆனால், இதை யாரும் உணருவதில்லை. வருங்கால சந்ததிகளுக்கு மாசடைந்த உலகை கொடுக்காமல், துாய்மையான, பசுமையான உலகை கொடுப்போம். அதற்கு, பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை தவிர்க்க, மனதார உறுதியேற்போம். இவ்வாறு, கூறினர்.