பி.எஸ்.என்.எல்., மாநாடு புதிய நிர்வாகிகள் தேர்வு
கோவை; கோவையில் நடந்த பி.எஸ்.என்.எல்., அகில இந்திய மாநாட்டில், தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு, புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். பி.எஸ்.என்.எல்., ஊழியர் சங்கத்தின், 11வது அகில இந்திய மாநாடு, கோவையில், இரு நாட்கள் நடந்தது.இதில், மத்திய அரசு பொதுத்துறை நிறுவனங்களை, தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும், பி.எஸ்.என்.எல்., ஊழியர்களுக்கு இரண்டாவது விருப்ப ஓய்வு திட்டத்தை, நிர்வாகம் அமல்படுத்தக்கூடாது, புதிய ஓய்வூதிய திட்டத்தை முழுமையாக ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், நிர்வாகம் 5ஜி சேவையை உடனே துவக்க வேண்டும். ஒப்பந்த ஊழியர்களுக்கு, குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயம் செய்திட வேண்டும் என்பன உட்பட, பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிர்வாகி அபிமன்யு, புதிய நிர்வாகிகளை அறிமுகம் செய்து வைத்தார். அகில இந்திய தலைவராக கேரளாவை சேர்ந்த விஜயகுமார், பொது செயலாளராக, மேற்கு வங்கத்தை சேர்ந்த அனிமேஷ் மித்ரா, உதவி செயலாளராக, தமிழகத்தை சேர்ந்த செல்லப்பா, பொருளாளராக, கர்நாடகாவை சேர்ந்த இர்பான் பாஷா உட்பட, 25 பேர் அகில இந்திய நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர்.