பி.டி., ஜோன் கிளாசிக் ஆணழகன் போட்டி; தென்மாநில அளவில் 200 பேர் அசத்தல்
கோவை; 'டீம் பி.டி., ஜோன்' சார்பில் மூன்றாவது 'பி.டி., ஜோன் கிளாசிக்-25' ஆணழகன் போட்டி, ஆர்.எஸ்.புரம், மாநகராட்சி கலையரங்கில் நேற்று நடந்தது.இதில், தமிழ்நாடு, கேரளம், கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, புதுச்சேரி என, தென் மாநில அளவில், 160 பேர் பங்கேற்றனர். 'கிங் ஆப் மிஸ்டர் சவுத் இந்தியா' மற்றும் 'கிங் ஆப் மிஸ்டர் கோயம்புத்துார்' ஆகியோரை தேர்வு செய்யும் விதத்திலும் நடந்த போட்டியில், ஆணழகன்கள் அபார திறமையை வெளிப்படுத்தினர்.சீனியர் பிரிவில், 55 முதல், 85 கிலோ மற்றும், 85 கிலோவுக்கும் அதிகமான எடைகளில் பங்கேற்றனர். ஜூனியர் பிரிவில், 23 கிலோ எடைப்பிரிவில், 30 பேர் உட்பட பல்வேறு பிரிவுகளில், 200க்கும் மேற்பட்டோர் அசத்தினர். கோவை மாவட்ட அளவிலான போட்டியிலும் பார்வையாளர்களை பரவசப்படுத்தினர்.'பாடி பில்டிங்' போட்டியில், ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் வெல்பவர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்பட்டது. கிளாசிக் உடலமைப்பு, மென்ஸ் உடலமைப்பு பிரிவில் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பெற்றோருக்கு, தலா ஒரு 'ஐபோன் 15' அளிக்கப்பட்டது.தவிர, மென்ஸ் உடலமைப்பு பிரிவில், முதல் மூன்று இடங்கள் பிடித்தோருக்கு ரூ.10 ஆயிரம், ரூ.5,000, ரூ.3,000 ரொக்கப்பரிசும், நான்கு, ஐந்தாம் இடங்களுக்கு பதக்கம், சான்றிதழ்கள், 'மசாஜ் கன்' பரிசாக வழங்கப்பட்டன.மாவட்ட அளவிலான போட்டியில், முதல் மூன்று பரிசாக ரூ.3,000, ரூ.2,000, ரூ.1,000 வழங்கப்பட்டது.பாடி பில்டிங் பிரிவில், ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பெற்றவருக்கு ரூ.20 ஆயிரமும், மென்ஸ் உடலமைப்பு பிரிவுக்கு ரூ.10 ஆயிரம் ரொக்கமும் வழங்கப்பட்டது.