அண்ணா நகர் வரை பஸ் இ.கம்யூ. வலியுறுத்தல்
கோவை; 'கெம்பனுார் அண்ணா நகர் வரை மீண்டும் பஸ் இயக்க வேண்டும்' என, இ.கம்யூ., மாவட்ட செயலாளர் சிவசாமி கோரிக்கை விடுத்துள்ளார். அவரது அறிக்கை: காந்திபுரத்தில் இருந்து தொண்டாமுத்துார் ஒன்றியம் கெம்பனுார் அண்ணா நகர் வரை இயக்கப்பட்டு வந்த, 21 எண்ணுள்ள பஸ், சமீபகாலமாக அண்ணா நகர் செல்லாமல் பாதியிலேயே திரும்பி வந்து விடுகிறது. அண்ணா நகர் கூலி தொழிலாளர்கள் அதிகம் வசிக்கும் பகுதி. இப்பகுதிக்கு பஸ் செல்லாததால், அங்கிருந்து நகரத்துக்கு கூலி வேலைக்கு வரும் தொழிலாளர்கள், பள்ளி மற்றும் கல்லுாரிக்கு செல்லும் மாணவ, மாணவியர் மற்றும் பொதுமக்கள் பஸ் வசதியின்றி பாதிக்கப்பட்டுள்ளனர். கலெக்டர் தலையிட்டு, காந்திபுரம் முதல் கெம்பனுார் அண்ணா நகர் வரை சென்று வந்த பஸ்சை மீண்டும் இயக்க, போக்குவரத்து அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.