ராஜவாய்க்காலில் புதர்கள் அகற்றம்; நீரோட்டம் சீரானதால் நிம்மதி
மடத்துக்குளம்; குமரலிங்கம் ராஜவாய்க்காலில் வீசப்பட்ட முட்புதர்கள் அகற்றப்பட்டு, பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. மடத்துக்குளம் அருகே குமரலிங்கத்திலுள்ள ராஜவாய்க்கால் வாயிலாக 1,100 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இந்த கரையில் இருந்த மரங்களை பொதுப்பணித்துறையினர் வெட்டி விட்டு, அதன் கிளை மற்றும் முட்புதர்களை வாய்க்காலில் வீசிச்சென்று விட்டனர். இதனால், வாய்க்காலில் தண்ணீர் செல்வது தடைபட்டு, நெற்பயிர்கள் கருகும் நிலை ஏற்பட்டது. வாய்க்காலுக்குட்பட்ட, 52 மடைகளில் பெரும்பாலான மடைகளுக்கு தண்ணீர் கிடைக்கவில்லை. இது குறித்து விவசாயிகள் தெரிவித்த புகாருக்கு பிறகு, பொதுப்பணித்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு செய்தனர். பின்னர் வாய்க்காலில் இருந்த கிளைகளை அகற்றி, நீரோட்டத்தை சீராக்கினர். இதனால், விவசாயிகள் நிம்மதியடைந்தனர். வாய்க்கால் கரையில் இருந்த மரங்கள் வெட்டப்பட்டது மற்றும் அலட்சியமாக பாசன நீர் தடைபட காரணமாக இருந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, அப்பகுதி விவசாயிகள் திருப்பூர் கலெக்டருக்கு புகார் மனு அனுப்பியுள்ளனர்.