கல்வி நிறுவனத்தை விரிவுபடுத்துவதாக வியாபாரியிடம் ரூ.10 லட்சம் மோசடி
கோவை : கல்வி நிறுவனத்தை விரிவுபடுத்துவதாக கூறி, ரூ.10 லட்சம் பணம் பெற்று மோசடி செய்த பெண்ணை, போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.காந்திபுரம், சண்முகசுந்தரம் வீதியை சேர்ந்தவர் முத்துக்குமார், 38. இவர் மருந்து மொத்த வியாபாரம் செய்து வருகிறார். இவரின் நண்பர் ஒருவர் மூலமாக சாய்பாபா காலனி, கே.கே.புதுாரை சேர்ந்த மாலதி, 47 என்பவர் அறிமுகமானார்.மாலதி ஆர்.எஸ்.புரம், பால் கம்பெனி பகுதியில் சூப்பர் பிரைனி கிட்ஸ் என்ற அகாடமியை நடத்தி வருவதாக, முத்துக்குமாரிடம் கூறியுள்ளார். தனது அகாடமியை விரிவுபடுத்த இடம் வாங்க உள்ளதாக கூறி, முத்துக்குமாரிடம் பணம் கேட்டார்.இதையடுத்து முத்துக்குமார், 2021 மார்ச் மாதம் ரூ.10 லட்சம் மாலதிக்கு கொடுத்தார். மாலதி நிலம் எதுவும் வாங்கவில்லை. முத்துக்குமார் கேட்டபோது, பணத்தை கல்வி நிறுவனத்தில் முதலீடு செய்திருப்பதாகவும், அதில் வரும் லாபத்தில், பங்கு தருவதாகவும் தெரிவித்தார்.ஆனால், பணமும் கொடுக்கவில்லை. பல்வேறு காரணங்கள் கூறி காலம் கடத்தி வந்தார். இந்நிலையில், மாலதியின் வீட்டுக்கு சென்று பணத்தை கேட்டபோது, ரூ.10 லட்சத்துக்கான காசோலையை மாலதி கொடுத்துள்ளார். அதை வங்கியில் செலுத்தியபோது, பணம் இல்லாமல் திரும்பி வந்தது. மாலதி குறித்து முத்துக்குமார் அக்கம் பக்கத்தினரிடம்விசாரித்தார்.அப்போது, மாலதி இதேபோல், பல காரணங்கள் கூறி பலரிடம் கோடிக்கணக்கில் பணம் பெற்று, ஏமாற்றியிருப்பது தெரியவந்தது. முத்துக்குமார் ஆர்.எஸ்.புரம் போலீசில் புகார் அளித்தார்.போலீசார் விசாரணை நடத்தி, மாலதியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.