சிறுத்தையை பிடிக்க அய்யர்பாடியில் கூண்டு தினமலர் செய்தி எதிரொலி
வால்பாறை: 'தினமலர்' செய்தி எதிரொலியாக, அய்யர்பாடியில் சிறுவனை கொன்ற ஆட்கொல்லி சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் கூண்டு வைத்துள்ளனர். வால்பாறை அடுத்துள்ளது அய்யர்பாடி எஸ்டேட் ஜே.இ.,பங்களா. இந்த எஸ்டேட்டில் அசாம் மாநிலத்தை சேர்ந்த சைபுல்ஆலம் என்ற ஐந்து வயது சிறுவனை, கடந்த மாதம் 6ம் தேதி இரவு, சிறுத்தை கவ்வி சென்று கொன்றது. இதனை தொடர்ந்து, சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்க வனத்துறையினர் நான்கு இடங்களில் கண்காணிப்பு கேமரா வைத்தனர். இதனிடையே வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை செயலாளர் சுப்ரியாசாஹூ உத்தரவின் பேரில், மனித -- வனவிலங்கு மோதலை தடுக்க கூடுதல் முதன்மை தலைமை வனக்காப்பாளர் ராமசுப்ரமணியன் தலைமையில் உயர்நிலைக்குழுவினர் சம்பவ இடத்தை நேரில் ஆய்வு செய்தனர். ஆனால், சிறுத்தையை பிடிக்க கூண்டு வைக்கப்படவில்லை. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் சிறுத்தை ஒன்று அதே எஸ்டேட் தொழிலாளர் குடியிருப்பு பகுதிக்கு விசிட் செய்தது. இது குறித்து செய்தி 'தினமலர்' நாளிதழில், செய்தி வெளியிடப்பட்டது. இதனை தொடர்ந்து, வால்பாறை வனச்சரக அலுவலர் சுரேஷ் கிருஷ்ணா தலைமையிலான வனத்துறையினர் சம்பவம் நடந்த அய்யர்பாடி எஸ்டேட் தொழிலாளர் குடியிருப்பு பகுதி அருகே, சிறுத்தையை பிடிக்க கூண்டு வைத்துள்ளனர். 'தினமலர்' செய்தி எதிரொலியால் கூண்டு வைக்கபட்டுள்ளதையடுத்து, எஸ்டேட் தொழிலாளர்கள் நிம்மதியடைந்துள்ளனர்.