சிறுத்தையை பிடிக்க வைத்த கூண்டு 6 ஆண்டுகளுக்கு பின் அகற்றம்
வால்பாறை : வால்பாறையில், சிறுத்தையை பிடிக்க வைக்கப்பட்ட கூண்டு, ஆறு ஆண்டுகளுக்கு பின் அகற்றப்பட்டது.வால்பாறை ஆனைமலை புலிகள் காப்பகத்தின் கட்டுப்பாட்டில் அமைந்துள்ளது. இங்குள்ள வால்பாறை, மானாம்பள்ளி ஆகிய இரு வனச்சரகங்களிலும் யானை, புலி, சிறுத்தை, காட்டுமாடு, கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் அதிக அளவில் உள்ளன.இந்நிலையில், கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன் வால்பாறை நகரை ஒட்டியுள்ள நடுமலை எஸ்டேட்டில், அசாம் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளியின், மூன்று வயது சிறுவனை சிறுத்தை கவ்வி சென்று, கொடூரமான முறையில் கொன்றது.இந்த சம்பவத்தை தொடர்ந்து, நடுமலை எஸ்டேட், வால்பாறை நகர் ஆகிய இரண்டு இடங்களில் சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் கூண்டு வைத்தனர். நடுமலை எஸ்டேட் பகுதியில் வைக்கப்பட்ட கூண்டில் சிறுத்தை சிக்கியது.வால்பாறை, வாழைத்தோட்டம் சிதம்பரனார் நகர் பகுதியில் சிறுத்தையை பிடிக்க வைத்த கூண்டு அகற்றப்படாமல் இருந்தது. இந்நிலையில், சிதம்பரனார் நகர் பகுதியில் வைக்கப்பட்டிருந்த கூண்டை நேற்று காலை வனத்துறையினர் அகற்றினர்.வனத்துறையினர் கூறுகையில், 'வால்பாறை, சிதம்பரனார் நகர் பகுதியில் தற்போது சிறுத்தை நடமாட்டம் இல்லாததாலும், சிறுத்தை நடமாட்டம் உள்ள பகுதியில் கூண்டு வைப்பதற்காக, இங்கிருந்த கூண்டு அகற்றப்பட்டது. இங்கு, மீண்டும் சிறுத்தை நடமாட்டம் கண்டறியப்பட்டால், கூண்டு வைக்கப்படும்,' என்றனர்.