சிறந்த நிறுவனத்துக்கு விருது; விண்ணப்பிக்க அழைப்பு
பொள்ளாச்சி; சமூகப் பொறுப்புணர்வுடன் செயல்படும் தொழில், சேவை மற்றும் வர்த்தக நிறுவனங்களுக்கு 'சிறந்த நிறுவனங்களுக்கான விருது' வழங்கி கவுரவிக்கிறது தமிழக அரசு.இது குறித்து, கோவை மாவட்ட கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) சங்கேத் பல்வந்த் வாகே கூறியதாவது: சிறந்த நிறுவனங்களுக்கான விருது, 2022ம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் தகுதி வாய்ந்த நிறுவனங்களுக்கு வழங்கப்படுகிறது. ஒரு லட்சம் ரூபாய் பரிசுத் தொகையும், சான்றிதழும் வழங்கப்படும்.இவ்விருது ஒவ்வொரு ஆண்டும் மாவட்டத்துக்கு ஒரு விருது வீதம், 37 மாவட்டங்களிலும் சிறப்பாகப் பணி செய்த தலைசிறந்த தொழில் மற்றும் சிறந்த வணிக நிறுவனங்களுக்கு வழங்கப்படுகிறது.பங்கு நிறுவனங்கள், கூட்டாண்மை நிறுவனங்கள் மற்றும் தனிநபர் நிறுவனங்கள், அரசு, அரசு சார்ந்த நிறுவனங்கள், தொழில் சேவை மற்றும் வர்த்தக நிறுவனங்களின் கூட்டமைப்புகள் இவ்விருது பெற விண்ணப்பிக்கலாம்.இந்நிறுவனங்கள் நேரடியாகவோ, தங்களின் அறக்கட்டளைகள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் தங்களது இதர முகமைகள் மூலமாகவோ செயலாற்றலாம். தனித்துவமான அறக்கட்டளைகள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் மன்றங்கள் சங்கங்கள் விருதுக்கு தகுதி பெற்றவை. இவ்விருதுக்கு தேவையான விண்ணப்பம், www.tnrd.tn.gov.inஎன்ற இணையதளத்தில் தகுந்த ஆவணங்களுடன், 45 நாட்களுக்குள் சமர்ப்பிக்கலாம். விருதுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் ஊரக வளர்ச்சித் துறையின் அரசாணை நிலை எண்.80ல் வெளியிடப்பட்டுள்ளது.இவ்வாறு, கூடுதல் கலெக்டர் கூறினார்.