உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / உழவர் நல சேவை மையம் அமைக்க அழைப்பு; வேளாண்மை படித்தவர்களுக்கு வாய்ப்பு

உழவர் நல சேவை மையம் அமைக்க அழைப்பு; வேளாண்மை படித்தவர்களுக்கு வாய்ப்பு

கிணத்துக்கடவு; கோவை மாவட்டத்தில், உழவர் நல சேவை மையங்கள் அமைக்க வேளாண் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க, மாவட்ட வேளாண் இணை இயக்குனர் அழைப்பு விடுத்துள்ளார். வேளாண் பட்டப்படிப்பு மற்றும் பட்டய படிப்பு முடித்த இளைஞர்களின் படிப்பறிவும், தொழில்நுட்பத் திறனும் உழவர்களுக்கு பயன்பெறும் வகையிலும், வேளாண் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கத்திலும், முதலமைச்சரின் உழவர் நல சேவை மையங்கள் அமைக்கப்படும் என, 2025 - 26ம் ஆண்டின் வேளாண் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, இத்திட்டத்துக் கு, ரூ .42 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இத்திட்டத்தில், 10 முதல் 20 லட்சம் ரூபாய் மதிப்பில் உழவர் நல சேவை மையங்கள் அமைக்கப்படுகிறது. இதற்கு, 30 சதவீதம், 3 முதல் 6 லட்சம் வரை மானியமாக வழங்கப்படுகிறது. இந்த மையத்தில் விவசாயிகளுக்கு தேவையான விதைகள், உரங்கள் மற்றும் இதர இடுபொருட்கள் விற்பனை செய்வதோடு, வேளாண் உற்பத்தியை பெருக்கவும் பூச்சி மற்றும் நோய் மேலாண்மைக்கு தேவையான ஆலோசனைகள், நவீனதொழில்நுட்பங்கள், வேளாண் விளைபொருட்கள் மதிப்பு கூட்டுதல் குறித்த ஆலோசனைகளும் வழங்கப்படும். இந்த சேவை மையத்தின் வாயிலாக, விவசாயிகள் ஒரே இடத்தில் அனைத்து சேவைகளையும் பெற முடியும். இந்த சேவை மையத்துக்கு, வேளாண் உழவர் நலத்துறையில் வழங்கப்படும் அனைத்து உரிமங்களும் வழங்கப்படும். இத்துடன், இத்திட்டத்தில் இணையும் பயனாளிகளுக்கு, தொழில்நுட்பத் திறன் மேம்படுத்தும் வகையில் அந்தந்த மாவட்டத்தில் உள்ள உழவர் பயிற்சி நிலையம் அல்லது வேளாண் அறிவியல் நிலையத்தின் வாயிலாக பயிற்சி அளிக்கப்படும். இதில், கோவை மாவட்டத்தில், 16 சேவை மையங்கள் அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் சேர விரும்பும் வேளாண் பட்டதாரிகளுக்கு, 20 முதல் 25 வயது வரை இருக்க வேண்டும். மேலும், பேங்கில் விரிவான திட்ட அறிக்கையுடன் கடன் பெற விண்ணப்பிக்க வேண்டும். பேங்க் நடைமுறைகளைப் பின்பற்றி கடன் ஒப்புதல் பெறப்பட்ட பின், இத்திட்டத்தில் மானிய உதவி பெற https://www.magrisnet.tn.gov.in/kaviadp/register என்ற இணைய முகவரியில் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து மானியத்திற்கு விண்ணப்பிக்கலாம். எனவே, இத்திட்டத்தினை பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென கோவை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் கிருஷ்ணவேணி அறிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை