உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பராமரிப்பின்றி பழுதான கேமராக்கள்: கணக்கெடுப்பு நடத்தி புனரமைக்கணும்

பராமரிப்பின்றி பழுதான கேமராக்கள்: கணக்கெடுப்பு நடத்தி புனரமைக்கணும்

பொள்ளாச்சி; 'பொள்ளாச்சி நகரில், செயல்படாமல் உள்ள கண்காணிப்பு கேமராக்களை, மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டுவரவும், கேமரா இல்லாத இடங்களில் கேமரா வைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும், என கோரிக்கை எழுந்துள்ளது.பொள்ளாச்சி நகரில், வாகனங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, சாலை வசதி ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும், நெரிசல் காரணமாக, மக்கள் அவதிப்படுகின்றனர். போக்குவரத்து நெரிசலால், முக்கிய சாலைகளில் அடிக்கடி விபத்துக்கள் மற்றும் குற்றங்கள் அதிகளவில் நடக்கிறது.குறிப்பாக, சாலைகளில் போக்குவரத்து விதி மீறி செல்லும் வாகனங்கள், ஒரு வழிப்பாதையில் செல்லும் வாகனங்கள், 'நோ பார்க்கிங்' பகுதிகளில் நிறுத்தப்படும் வாகனங்களால், நெரிசல் மற்றும் சிறு குற்றங்கள் எண்ணிக்கை அதிகரிக்கிறது.இதனை சீரமைக்க, போலீசார் பல்வேறு நடவடிக்கை எடுத்த போதும், விதி மீறும் வாகன ஓட்டுநர்களை கட்டுப்படுத்த முடியாத நிலை உள்ளது.இப்பிரச்னைக்கு தீர்வு காண, போலீசார் சார்பில் முக்கிய ரோடுகள் சந்திப்பு, தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகள், பஸ் ஸ்டாண்ட், குடியிருப்பு பகுதிகளில், நன்கொடையாளர்கள் உதவியுடன் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன.தொடர்ந்து, கட்டுப்பாட்டு அறையில் உள்ள 'டிவி'க்கள் வாயிலாக கண்காணிக்கப்பட்டும் வந்தன. ஆனால், தற்போது, பல இடங்களில் பொருத்தப்பட்ட கேமராக்கள், பயன்பாடின்றி காணப்படுகின்றன. சில இடங்களில் கேமராக்கள் சேதமடைந்துள்ளன.சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:நகரில், கேமராக்கள் பொருத்தி குற்ற சம்பவங்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. பெரும்பாலான கேமராக்கள் வெறும் காட்சிப்பொருளாக உள்ளன.ஜோதிநகர் பகுதியில், கேமரா பொருத்தப்பட்டிருந்த கம்பம் மட்டும் உள்ளது; கேமரா இல்லை. பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே கேமராவுடன் உள்ள கம்பம், எப்போது வேண்டுமென்றாலும் விழும் நிலையில் உள்ளது.போலீசார் உரிய கவனம் செலுத்தி, பயன்பாடு இல்லாத கேமராக்கள், கேமரா இல்லாத இடங்கள் குறித்து கணக்கெடுத்து, அவற்றை பராமரிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ