சோமனூர்;சோலார் மின் உற்பத்திக்கு மத்திய அரசின் மானிய மும், மாநில அரசின் நெட் மீட்டர் அனுமதியும் கிடைத்தால், மின் கட்டணம் குறைய வாய்ப்புள்ளதாக விசைத்தறியாளர்கள் நம்பிக்கையுடன் எதிர்பார்த்துள்ளனர்.தமிழகத்தில் கோவை மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் மட்டும், 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகள் இயக்கப்படுகின்றன. அதில், 90 சதவீதம் விசைத்தறிகள் கூலியின் அடிப்படையில் இயக்கப்படுகின்றன. இதன் மூலம் கிடைக்கும் வருவாயில், மூன்றில் ஒரு பங்கு மின் கட்டணத்துக்கே செலவாவதால், விசைத்தறியாளர்கள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகி உள்ளனர். மின் கட்டண நெருக்கடியில் இருந்து மீள, சோலார் மின் உற்பத்தி மூலம் விசைத்தறிகளை இயக்குவது தான் ஒரே வழி என, விசைத்தறியாளர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர். மத்தியில் பா.ஜ., ஆட்சி அமைத்த சில ஆண்டுகளுக்கு பின், பவர் டெக்ஸ் திட்டம் அமல்படுத்தப்பட்டது. அதன் மூலம் சோலார் தகடுகள் அமைத்து மின் உற்பத்தி செய்ய விசைத்தறியாளர்களுக்கு, 50 சதவீத மானியம் வழங்கப்பட்டது. ஆனால், சோலார் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை பெற, நெட் மீட்டர் நிறுவ தமிழக அரசு அனுமதி தரவில்லை. இதனால், விசைத்தறியாளர்கள் சோலாருக்கு மாற முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர். இந்நிலையில், தமிழக அரசு விசைத்தறிக்கான மின் கட்டணத்தை உயர்த்தியது. பல போராட்டங்களை நடத்திய விசைத்தறியாளர்கள் ஒரு வழியாக மின் கட்டண உயர்வில் சலுகைகள் பெற்றனர். சோலார் தான் ஒரே தீர்வு
வரும் வருவாயில் பெரும்பகுதி மின் கட்டணத்துக்கே செல்வதால், விசைத்தறியாளர்கள் சோலார் மின் உற்பத்தி மூலம் விசைத்தறிகளை இயக்கினால் தான், நெருக்கடியில் இருந்து மீள முடியும் என்ற எண்ணத்தில் உள்ளனர்.இதுகுறித்து கோவை, திருப்பூர், மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர் சங்க பொருளாளர் பூபதி கூறியதாவது:தற்போது விசைத்தறிக்கென 3ஏ 2 டேரிப் உள்ளதாலும், அதன்மூலம் மின் கட்டண சலுகையும் கிடைப்பதால் விசைத்தறிகள் இயக்கப்படுகின்றன. ஆண்டுக்கு ஒரு முறை ஆறு சதவீத மின் கட்டண உயர்வு எங்களை மேலும் பாதிக்கும். வரும் காலத்தில் மின் கட்டண செலவு தொகையை நாங்கள் குறைத்தால் தான் தொழிலை நடத்த முடியும். விசைத்தறி குடோன்களில் சோலார் தகடுகள் பொருத்தி, அதன் மூலம் மின் உற்பத்தி செய்தால் மின் கட்டணம் வெகுவாக குறையும் என்ற நம்பிக்கை உள்ளது. இதன் மூலம் தமிழக அரசுக்கு மின் கட்டண மானிய செலவு குறையும். 50 சதவீத மானியம்
3 ஏ 2 டேரிப் பயன்படுத்தும் விசைத்தறியாளர்களுக்கு, 12 கிலோ வாட் வரை சோலார் மின் உற்பத்தி செய்யவும், நெட் மீட்டர் அமைக்கவும் தமிழக அரசு அனுமதிக்க வேண்டும். மேலும், 50 சதவீத மானியமும் வழங்க வேண்டும். அதேபோல், பலர் டெக்ஸ் திட்டத்தின் கீழ் சோலார் தகடுகள் பொருத்த மத்திய அரசு, 50 சதவீத மானியம் வழங்க வேண்டும். தொழில் மந்தமாக உள்ள காலங்களில், உற்பத்தியாகும் சோலார் மின்சாரத்தை, அரசே எடுத்து கொள்ள வசதியாக, நெட் மீட்டர் பொருத்த தமிழக அரசு திட்டம் வகுக்க வேண்டும். எவ்வித நெருக்கடிகளும் இல்லாமல் சோலார் மின் உற்பத்திக்கு மத்திய, மாநில அரசுகள் அனுமதி வழங்க வேண்டும். அப்போதுதான் நாங்கள் விசைத்தறி ஜவுளி தொழிலில் ஈடுபட முடியும். இவ்வாறு, அவர் கூறினார்.
மாநில அரசுக்குத்தான் முழு பொறுப்பு
பல லட்சம் குடும்பங்கள் பயன்பெறும் விசைத்தறி ஜவுளி தொழிலை பாதுகாக்க வேண்டிய முழு பொறுப்பும் தமிழக அரசுக்குத்தான் உள்ளது. ஏற்கனவே குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் விசைத்தறிக்கான மின் கட்டணம் குறைவாக உள்ளது. லோக்சபா தேர்தல் முடிந்தவுடன் மகாராஷ்டிராவிலும் விசைத்தறிக்கு மின் கட்டணத்தில் பல சலுகைகள் வழங்க உள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இதனால், அங்கு விசைத்தறி குடோன்கள் அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. உற்பத்தி செலவு, போக்குவரத்து செலவு குறையும் என்பதால், நமது பகுதிக்கு கிடைக்க வேண்டிய ஆர்டர்கள் கிடைக்காமல் போகும் நிலை ஏற்படும். அதனால், இப்பிரச்னையில் தமிழக அரசு சிறப்பு கவனம் செலுத்த வேண்டியது அவசர அவசியம்.