கோவை: கோவை - அவிநாசி ரோட்டில், ஐந்து இடங்களில் சுரங்க நடைபாதை அமைக்கும் பணியை கைவிட முடிவு செய்துள்ள மாநில நெடுஞ்சாலைத்துறை, சாலை பாதுகாப்பு கமிட்டியின் ஒப்புதலுக்கு கருத்துரு அனுப்பியிருக்கிறது.கோவை - அவிநாசி ரோட்டில் உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை, 10.1 கி.மீ., துாரத்துக்கு, 'எக்ஸ்பிரஸ் வே' என்ற பெயரில், ரூ.1,621 கோடியில், 17.25 மீட்டர் அகலத்தில் நான்கு வழி மேம்பாலம் கட்டப்படுகிறது.இப்பாலம் பயன்பாட்டுக்கு வந்தாலும், சாலையை பொதுமக்கள் சிரமமின்றி கடப்பதற்கு வசதியாக, கிருஷ்ணம்மாள் கல்லுாரி, கே.எம்.சி.எச்., மருத்துவமனை, ஜி.ஆர்.ஜி., பள்ளி, பி.எஸ்.ஜி., கல்லுாரி மற்றும் லட்சுமி மில் சந்திப்பு ஆகிய ஐந்து பகுதிகளில் சுரங்க நடைபாதை அமைக்கப்படும் என, மாநில நெடுஞ்சாலைத்துறையால் (திட்டம்) ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இப்போது, இப்பணியை கைவிட, மாநில நெடுஞ்சாலைத்துறை முடிவு செய்திருக்கிறது.இதுதொடர்பாக, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:'மெட்ரோ ரயில்' திட்டம், மத்திய - மாநில அரசுகளின் பரிசீலனையில் இருக்கிறது. இதில், ஸ்டேஷன் அமையும் இடங்களில், சுரங்க நடைபாதை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. 'எஸ்கலேட்டர்' வசதியுடன், மெட்ரோ நிறுவனத்தினர் நவீன முறையில் அமைக்க வாய்ப்புள்ளது.அதே இடங்களில், மாநில நெடுஞ்சாலைத்துறை தரப்பிலும் சுரங்க நடைபாதை அமைத்தால், ஒரே விதமான பணிக்கு இரண்டு முறை செலவிட்டதாக இருக்கும். அதனால், சுரங்க நடைபாதை அமைக்கும் பணியை கைவிட, மாநில நெடுஞ்சாலைத்துறை முடிவு செய்திருக்கிறது. இதற்கு ஒப்புதல் கேட்டு, கலெக்டர் தலைமையிலான சாலை பாதுகாப்பு கமிட்டிக்கு, கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது.மேம்பாலம் பயன்பாட்டுக்கு வந்ததும், ரோட்டில் வாகன போக்குவரத்து குறைந்து விடும். இருந்தாலும், பாதசாரிகள் ரோட்டை கடந்து செல்ல, முக்கிய சந்திப்புகளில், 'பெலிகன் சிக்னல்' அமைக்க, முடிவு செய்யப்பட்டிருக்கிறது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
அகற்ற அறிவுறுத்தல்
பீளமேட்டில் பி.எஸ்.ஜி., தொழில்நுட்ப கல்லுாரி முன்புறமுள்ள, இரும்பு நடைமேம்பாலத்தை அகற்ற, நெடுஞ்சாலைத்துறையில் இருந்து அறிவுறுத்தப்பட்டுள்ளது. அப்பகுதியில், ஓடுதளம் மற்றும் இறங்கு தளம் அமைத்தபின், ஐந்தரை மீட்டர் உயரத்தில், புதிய வடிவமைப்பில் நடைமேம்பாலம் அமைத்துக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.